பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

என் சரித்திரம்

களுக்கு இன்புறும் தகுதியில்லாமற் போனாலும் அவர் அடையும் இன்பத்திலே சிறிதும் குறைவு வராது.

பாடம் சொல்லுதல்

பாடம் சொல்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்திய கர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம் வீட்டு வெளித்திண்ணையின் மேலைக்கோடியில் உட்கார்ந்து கொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்த வழியே போவோர் அவரைக் கண்டு வணங்குவார்கள். சிலர் திண்ணையில் வந்து மரியாதையோடு அமர்வார்கள். உடனே சடகோபையங்கார் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்ல ஆரம்பித்து விடுவார்; நயமாகப் பொருள் சொல்வார். வந்தவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அவர் இருக்குமிடம் தேடி வந்து அவருடைய இனிய தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டுப் போவார் பலர். செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் அத்வைத சாஸ்திரத்திலும் அவருக்கு ஆராய்ச்சி அதிகம். கம்பராமாயணத்திலும் நல்ல பழக்கம் இருந்தது. அந்த நூற் செய்யுட்களைச் சொல்லி மணிக்கணக்காகப் பொருள் கூறிக் கொண்டிருப்பார் கேட்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. ஏதோ இனிய சங்கீதக் கச்சேரியைக் கேட்பது போலவே இருக்கும்.

அவரிடம் சிலர் முறையாகப் பாடங் கேட்டு வந்தார்கள். நாள் தவறாமல் திண்ணையில் உட்கார்ந்து வந்தவர்களுக்குப் பாடஞ் சொல்வதில் அவருக்குச் சலிப்பே உண்டாவதில்லை. “கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொல்ல வேண்டும். கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லக்கூடாது. பாடஞ் சொல்வதனால் உண்டாகும் முதல் லாபம் நம்முடையது. பாடம் சொல்லச் சொல்ல நம் அறிவு உரம்பெறும்” என்பார்.

“என் தமையனராகிய நரசிம்மையங்கார் தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிடம் கற்றுக் கொண்டார். அவர் தமிழிலும் சங்கீதத்திலும் சிறந்த அறிவு வாய்ந்தவர். கல்வியில் அவர் என்னை மிஞ்சிவிட்டார். இதற்கு என் காரணமென்று கவனித்தேன். அவர் பல சிஷ்யர்களுக்குப் பாடஞ் சொன்னார். அவர்களைக் கேள்வி கேட்டுக் கேட்டு அவர்களுடைய அறிவை விருத்தி பண்ணியதோடு தம்முடைய கல்வியையும் பலப்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தை நானும் தெரிந்து கொண்டேன். மாணாக்கர்களைக் கசக்கத் தொடங்கினேன். இதனால் என்