பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

125


கரையில் கடலை ஒட்டினாற்போல், வானுலகைத் தாங்கும் கம்பம்போல், ஏணிக் கெட்டா உயர்வுடையவாய்க் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப் பெற்று கூரையிட்டு வேயாத மாடத்தின் மீது, கலங்கரை விளக்குப் பொறுத்தப் பெற்றிருக்கும்; கடல் கடந்த நாடுகளிலிருந்து, கலங்கள் வழியாக வந்து இறங்கிய பண்டங்களும், கலங்களில் ஏற்றி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று வணிகம் புரிய வந்து குவிந்த பண்டங்களும், வரிசை வரிசையாக வகைப்படுத்தி வைத்திருக்கும் பண்டசாலைகள், கலங்கரை விளக்க வேயா மாடத்தை அடுத்துக் கட்டப்பெற்றிருக்கும். பண்டசாலைகளுக்குப் பக்கத்தில் ஆயத்துறைகள் அமைந்திருக்கும். மான்கண் போலும், அழகிய சிறு சிறு கோணங்களைக் கொண்ட சாளரங்கள் வைத்துக் கட்டிய மாளிகைகளில் வாழும் அவ்வாயத்துறை அலுவலாளர். ஆங்குக் குவிந்து கிடக்கும் பண்டப் பொதிகளுக்கு உரிய சுங்கங்களைத் தண்டியும், சங்கம் இறுத்த பொதிகள் மீது, தம் அரசர்க்குரிய புலி இலச்சினையைப் பொறித்தும், புலி இலச்சினை பொறித்த பொதிகளை, ஆயத்துறைகளை அடுத்திருக்கும் உயர்ந்த மேடைகள் மீது போர் போல் குவித்து வைத்தும், இரவு பகல் ஓயாமல் பணியாற்றிக் கிடப்பர்.6

துறைமுகத்தைக் கடந்து, கரைநோக்கிச் சிறிது தூரம் சென்றால், ஆங்கே கடல் வாணிகத்தால் வளம் மிகுந்து செல்லும் விருப்பம் உடையராய் வந்து வாழும் வெளிநாட்டு வணிக மக்களின் வாழிடத்தைக் காணலாம். ஆங்கு வாழ்வார். ஒரே நாட்டிலிருந்து வாராது, வேறு பல நாடுகளிலிருந்து வந்தவரேயாயினும், ஒரு நாட்டு மக்கள் போல் உள்ளம் கலந்து வாழ்வர். நம் நாட்டு மக்களால், யவனர் என அழைக்கப்பெறும், அவ்வெளிநாட்டு மக்களின் வாழிடம், வளம் பல நிறைந்தது. அவ்வளத்தை ஒரு முறை கண்டார், அவ்விடத்தை விடுத்து வேறிடம் செல்ல விரும்பார், அத்துணை வளம் மிக்கது, அவ்வெளிநாட்டார் வாழிடம்.7