பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. உள்ளுறை உவமம்

உவமை இரண்டு வகைப்படும்: அறியாத ஒரு பொருளை விளக்க அறிந்த ஒரு பொருளை எடுத்துக்காட்டி இதுபோல் இருக்கும் அது எனக் கூறுவது ஒன்று. இது உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் வரும். இது ஏனை உவமம் என்றும் அழைக்கப்படும். எவ்வித அடையும் இல்லாமல் வறிதே உவமம் என்றும் அழைக்கப்படும். மற்றொன்று செய்யுளில் மட்டுமே வருவது; அதுவே உள்ளுறை உவமம்; உவமப்போலி என்றும் அழைக்கப் பெறும்,

ஆடவர்க்குரிய் இலக்கணம் அனைத்தையும் குறைவறப் பெற்ற ஒர் ஆண்மகனும். பெண்டிர்க்குரிய இலக்கணம் அனைத்தையும் குறைவறப்பெற்ற ஒரு பெண் மகளும் காதலால் ஒன்றுபட்டுக் கருத்து ஒருமித்த உயர்ந்த இல்வாழ்க்கை நடாத்தும் நிலையில் ஒருவரோடு ஒருவர் சொல்லாடும்போது பலரும் அறிய வெளிப்படையாகக் கூறத்தகாத சில எண்ணங்களை நாகரீகமாக மறைத்துக் கூற, புலவர்கள் கையாளும் முறையே உள்ளுறை உவமம். அகத்திணைப் பொருள்களுள் தெய்வம் நீக்கிய ஏனைய கருப்பொருள்களின் இயல்புகளையும் செயல்களையும் எடுத்துக் கூறுமுகத்தான், அகத்திணைத் தலைவர்களாகிய தலைவன் தலைவியர்களின் இயல்புகளையும் செயல்களை யும் உய்த்துணர வைப்பதே உள்ளுறை. இதில் கருப்பொருளின் நிகழ்ச்சி உவமை: அகத்திணைத் தலைவர்களின்