பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

முடியரசன்


இன்பவுணர்வு சுரக்கின்ற இளைய நெஞ்சங்களைக் கைம்மை என்ற குப்பையை இட்டுத் தூர்க்காதீர். அவ்விளமை ஒரு கொழுகொம்பினை நாடும் பொழுது, சாத்திரங்களைச் சான்று காட்டித் தடைகள் செய்யாதீர் எனக் கெஞ்சுகின்றார்.

‘காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர்-ஒரு
கட்டழகன்திருத் தோளினைச் சேர்ந்திடச்

சாத்திரம் பார்க்காதீர்’ என்று

கெஞ்சும் முறையில் பணிந்து நின்று கூறுகிறார். எவ்வளவு எடுத்தெடுத்துக் கூறினும் கேளாச் செவியினராகிக் கிடக்கின்ற மக்களையே காணுகின்றார்; மனம் வெதும்புகின்றார்; நிமிர்ந்து நின்று நாட்டையே திட்டுகின்றார்,

“புண்படைத்த என்நாடே கைம்மைக் கர்வேல்

பொழிகின்றாய் மங்கையர்மேல்; அழிகின்றாயே”

என்று, கைம்மையைப் பெருகவிட்டால் நாடு அழிந்துவிடுமே என ஏங்குகின்றார்.

“கைம்மை எனக்கூறி-அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய

நடுவிற் பாய்ச்சுகின்றோம்”

என்று, பெண்கள் நெஞ்சிலே, கைம்மையென்ற வேலைப் பாய்ச்சிப் புண்படுத்து கின்றோமே நாம் என்று “கைம்மைக் கொடுமை’ என்று தலைப்பிற் பாடி வேதனைப்படுகின்றார்.

ஏழு வயதுச் சிறுமி அவள், அப் பெண்மகளின் இளமையைப் பாவேந்தர்

“கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,

தாவாச் சிறுமான், மோவா அரும்பு”

என அழகாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், அக் குஞ்சு அச் சிறுமான், அவ் வரும்பு திருமணமாகிப் பின் ‘தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்’ இருக்கிறாள். தந்தையோ தன் மனைவியை இழந்து, மறுமணஞ் செய்து கொண்டு, இன்ப விளையாட்டு விளையாடுகின்றான். இக் காட்சிகளைக் காணுகிறது, அக் கூவத் தெரியாத குயிலின் குஞ்சு. அக் குஞ்சு தந்தையின் எதிரிற் சென்றால், நீ போ என்று புருவம் நெறிக்கின்றான். இந் நிலையில் அக் குழந்தையின் மனக் குமுறலை - வடிக்கும் கண்ணீரைக் “குழந்தை மணத்தின் கொடுமை” என்ற தலைப்பில் வடித்துக் காட்டுகிறார்.