பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கண்ணை இழந்தவன் நீயோ, நானோ? குழந்தை தியாகராஜனை சங்கீதப் பித்தும் சினிமாப் பித்தும் மட்டும் பிடித்திருக்கவில்லை; நாடகப் பித்தும் பிடித்திருந்தது. அதிலும் திரு எஸ்.ஜி. கிட்டப்பாவின் 'ஸ்பெஷல் நாடகமென்றால் அப்பாவின் விசிறி மட்டை அடிக்குக்கூட அஞ்சாமல் அவன் போய் வந்து விடுவான். அப்பா அவனுடைய கலையார்வத்தை ஏன் விரும்ப வில்லை 'கலை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கக் கூடியவரா அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை: அவருக்கும் கலை யார்வம் உண்டு. அதன் காரணமாகக் கதா காலட்சேபம் செய்பவர்களுக்கு அவர் பின்பாட்டுக்கூடப் பாடுவதுண்டு. அது மட்டுமா? அமெச்சூர் நாடகங்களில் அவர் அயன் ஸ்திரீ பார்ட் வேடம் தாங்கி நடிப்பதுகூட உண்டு. ஆயினும்... அந்த நாட்களில் அம்மாதிரிக் கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அவ்வளவு மதிப்பில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; அவற்றைக் கொண்டு ஓரளவாவது வயிறு வளர்க்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. ஏதோ, பெயரளவில் நாலு பேர் பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டைக் கொண்டு அரிசி வாங்க முடியுமா? பருப்பு வாங்க முடியுமா? உப்பு வாங்க முடியுமா? ஒன்றும் வாங்க முடியாத அந்தப் பாராட்டைத் தாமே நாளடைவில் விரும்பாமற் போய்விட்டபோது, தன் மகன் மட்டும் ஏன் விரும்பவேண்டும்? வேண்டாமே! இதுதான் அவருடைய எண்ணம். வேண்டுமானால் 'தொண்டு என்று நினைத்து அவர் அவற்றைச் செய்திருக்கலாம்; தம் மகனையும் செய்ய விட்டிருக்கலாம். ஆனால்...