பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

எல்லாம் தமிழ்

இப்படி நீராடிக்கொண்டிருக்கையில் எதிரே ஆற்று நீரில் ஒரு மாவிலைக் கொத்து மிதந்து வந்தது. இலைகள் சில மேலே மிதந்தன; சில நீருள் மறைந்திருந் தன. அருகில் வர வர அது வெறும் இலைக் கொத்தாகத் தோன்றவில்லை. ஆம், அந்தக் கொத்தில் ஒரு மாங்காயும் இருந்தது. அது கண்ணிலே பட்டவுடன் நீராடும் மட மகளின் நாவில் நீர் சுரந்தது. மெல்ல அதன் அருகே சென்று சட்டென்று எடுத்தாள். இலைகள் அகலமாகத் தளதளவென்று இருந்தன. அந்தக் காயோ தனியாக ஒரு மணம் வீசியது. 'நாம் இவ்வளவு முன்னேரத்தில் ஆற்றுக்கு வந்த பயனை இதோ கண்டுவிட்டோமே !' என்று அவள் எண்ணினாள். கையில் எடுத்த மாங்கொத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பார்ப்பதற்கே அழகாக இருந்தது மாவிலைக் கொத்து.

மாங்காயைத் தனியே பறித்து இலைக்கொத்தைக் கரையின்மேல் வீசி எறிந்தாள். அதற்குள் அவளுக்குச் சிறிய குழந்தையைப்போல ஆவல் தோன்றியது; மாங்காயைச் சுவைத்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல்தான். காலை நேரத்தில் தன்னையே தேடிவந்தது போல் வந்து கைப்பட்ட அதைத் தின்பதில் என்ன தவறு? அதைக் கடித்தாள். அதன் நறுமணம் நன்றாகத் தெரிந்தது. தே மாங்காய்; அதாவது இனிப்பான இனத்தைச் சேர்ந்தது அது; காயாகத் தின்றாலே நன்றாக இருப்பது. கடித்துச் சுவைத்துச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தாள்.

ஏதோ ஆளரவம் கேட்டது. மாங்காய்ச் சுவையில் உலகையே மறந்து நின்ற பெண் நிமிர்ந்து நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/12&oldid=716578" இலிருந்து மீள்விக்கப்பட்டது