பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

39

 "பல பெரிய மன்னர்களை இப் பாண்டிய மன்னர் வென்றாரென்பது உண்மைதான். வேறு யாருடைய குடையின் கீழும் இந்நாட்டார் வாழாதபடி தம் ஒரு குடையை விரித்து உலகைப் புரக்கிறார் இப் பெரு வழுதியார். இவருடைய குடைவிரிய மற்றவர்களுடைய குடைகளெல்லாம் மடங்கின என்று சொல்லிப் பாராட்டுகிருேம். ஆனால் இவர் குடையும் மடங்கும் குடை என்று யாரேனும் சொல்வார்களா ?”

"சொல்லமாட்டார்கள், சொல்லமாட்டார்கள் " என்று மெல்லிய குரலில் அங்குள்ளவர்கள் சொல்லுவது காரிகிழார் காதில் விழுந்தது.

"இவர் குடையும் மடங்கும் என்று நான் சொல்லுகிறேன்."

"ஆ !" என்று திடுக்கிட்டனர் பலர். இதென்ன அநுசிதமான வார்த்தையைப் பேசுகிறார் புலவர்" என்று எண்ணினர் சிலர். புலவர் கூட்டத்தில் எல்லோரும் காரிகிழார் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு நோக்கினர்.

"இவர் குடை மடங்குவது கிடக்கட்டும். எட்டுத் திக்கிலும் உள்ள மன்னர்களை வென்று அவர்கள் முடி தம் அடிவருட நின்ற பிரான் என்று நம் அரசரைக் கொண்டாடுகிறோம். வணங்கா முடியுடைய வழுதி என்று சொல்லுகிறோம். இவர் வணங்கும் முடியை உடையவரே என்று நான் சொல்லுகிறேன்; தைரியத்தோடு சொல்லுகிறேன்."

சபையில் உள்ளவர்கள் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. 'சாமானியமான குறுநில மன்னர்களெல்லாம் வணங்காமுடித் தம்பிரான் என்று பட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/47&oldid=1529289" இலிருந்து மீள்விக்கப்பட்டது