பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எல்லாம் தமிழ்


ஆனாலும் அவள் பெண்தானே ? தன் உள்ளக் கோயிலில் வைத்துப் பூசிக்கும் தெய்வத்துக்கு அருகிருந்து தொண்டு புரியும் ஆசை எழாதா? ஊரார் அறியாமல் அவர்கள் இருவரும் பழகிவந்த காலம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது களவொழுக்கத்திலே அளவளாவிய அவர்களுக்கு இடையிடையே ஒரு நாள் இரண்டு நாள் பிரிந்து வாழ்வது துன்பமாக இருந்தது. அதனால் என்றும் பிரிவின்றி வாழவேண்டுமென்று எண்ணி உலகறிய மணம் புரிந்துகொண்டனர். அவர்கள் விருப்பம் நிறைவேறியது. நகமும் சதையும்போல ஒன்றி மனையறம் காத்து வந்தனர்.

இப்பொழுது அதற்கு இடையூறு வந்துவிட்டது. ஒன்றி வாழவேண்டிய நிலையில் பிரிவு வந்திருக்கிறது. பகலெல்லாம் அறத்தைச் செய்து பொழுதுபோயிற்று. இரவு வந்துவிட்டால் அவள் தானும் தனிமையுமாக இருந்தாள். அப்பொழுது அவனைப் பற்றிய நினைவு மிகுதியாயிற்று. உள்ளம் நெகிழ்ந்தது. காலையில் எழுந்தால் அவள் முகம் வாடியிருக்கும். அவளுடைய தோழியரும் பிறரும் அதைப் பார்த்துத் துணுக்குறுவார்கள். அவர்களுக்கு அதன் காரணம் நன்றாகத் தெரிந்ததுதானே ? ஆகவே அவர்களும் மனம் உளைவார்கள். தலைவன் தவறு செய்வதை நினைத்து வருந்துவார்கள். எல்லா வகையிலும் உத்தமியாகிய அந்தப் பெருமாட்டியின் மலரனைய உள்ளம் மறுகுவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகவே அந்த வருத்தந்தான் அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

எழுந்தபொழுது வாடியிருந்த மனைத் தலைவியின் முகம் அடுத்த கணத்தில் மலர்ந்துவிடும். வழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/66&oldid=1529424" இலிருந்து மீள்விக்கப்பட்டது