பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் செய்த சோதனை

73

 ஆசை ஒருபுறம் இருக்க, அவருடைய நற்குணங்களைப் பார்த்து வியப்பவர் பலர். அவருடைய பொறுமையை வேறு எவரிடமும் காண்பது அரிது. உடல் வலியும் உள வலியும் ஒருங்கே அமைந்த அவ்வுபகாரியின் பொறுமை புலவர் பாராட்டுக்கு உரியதாயிற்று.

"நம்முடைய சர்க்கரையைப் போல இனிப்பவர் யாரும் இல்லை. அவருடைய பொறுமைக்குப் பூமியும் நிகர் இல்லை" என்ற எண்ணத்தில் ஊறிய புலவர், செங்குன்றூர் எல்லப்பரிடத்தில் உள்ள பொறுமையையும் சோதிக்க எண்ணினர்.

புலவரும் எல்லப்பரும் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு மூன்று நாள் புலவரைத் தங்கச் செய்து அளவளாவினார் எல்லப்பர். பிறகு புலவர் விடைபெற்றுக் கொள்ளும் போது அவ் வுபகாரி, பரிசில் வழங்கினர். புலவர் அதைத் தம் இடக்கையை நீட்டி வாங்கினர். அப்போது அருகில் இருந்தவர் திடுக்கிட்டனர். 'கொங்குப் புலவருக்கு மரியாதை தெரியவில்லையே! இடக் கைக்கும் வலக் கைக்கும் வித்தியாசம் தெரி யாத இந்த முரட்டு மனிதர் தமிழ்ப் புலவரென்று சொல்லிக் கொள்ளும் தகுதியில்லாதவர்' என்று சிலர் எண்ணினர்.

எல்லப்பருக்கும் புலவர் செயல் தவறாகவே பட் !-து. அவர் கண்கள் சிவந்தன. 'இடக் கையால் வாங்குவதுதான் கொங்கு நாட்டார் வழக்கமோ?" என்று படபடப்புடன் கேட்டார். புலவர் யோசனை சிறிதுமின்றிப் புன்முறுவல் பூத்தபடி உடனே விடை கூறினார்: வலக் கை ஆணூர்ச் சர்க்கரையின் அன்புப் பரிசிலப் பெறும் தனி உரிமையை உடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/81&oldid=1529518" இலிருந்து மீள்விக்கப்பட்டது