எல்லோரும் இந்நாட்டு மன்னர்
11
முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழிவழி கிடைத்திடும் என்ற நிலையை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்பு தைப்போனாயினும்,—ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும், என்ற நம்பிக்கையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்— என்பதிலே மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி நடாத்தும் உரிமையைக் குறிக்கமட்டுமே, பயன்படுதல் வேண்டுமேயன்றி, மன்னன் போல், அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எது செயினும் முறையே என்று எவரும் இருத்தல் வேண்டும் என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடிஅரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத்தள்ளிடும் மாபெரும் சதியாகிப்போகும்,
இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகிவிட்டது என்றுதானோ, என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருப்பர் — ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறைபற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.