10
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர்களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும், உள்ளனர்! எகிப்து நாட்டு நாசரும், பிரான்சின் தெகோலும், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்ணோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும் சர்வாதிகாரிகள் எனும் நிலையில் தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர் தானே ஆட்சி நடத்துகிறார்.
இன்றைய உலகில், முடிமன்னர்களும் உள்ளனர். பிடியை பிரபுக்களிடம் விட்டு விட்டு இருக்கும் முடிதாங்கிகளும் உள்ளனர்.
பாராளுமன்ற முறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள்—அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது; எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான்—அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல்—இதுதான் உண்மையான மக்களாட்சி; மற்றது போலி! புரட்டு! பகட்டு! – என்று செப்புகிறது.
இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதேயன்றிப், பாராளுமன்ற ஆட்சி முறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவவாதிகள் நிரம்ப உள்ளனர்.