உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

9


முடி அரசுக்‌ காலத்து முறை, மக்கள்‌, மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டிப்‌ பிழைத்துக்கிடப்பது.

குடி அரசுக்‌ காலத்திலோ மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, ஆளவந்தார்கள்‌, இடம்‌ பெற்றிருப்பர்‌.

பசிப்பிணிபோக்கி, வளம்‌ உண்டாக்கி, நல்‌வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும்‌, குடி அரசுகளும்‌ உண்டு. ஒரே நாளில்‌ அமைச்‌சர்‌ எண்பது ஊர்‌ உலா வந்தார்‌ உமக்காக!! என்றுரைத்தும்‌, உமக்காக இன்னின்ன திட்டங்‌கள்‌ தீட்டப்பட்டுள்ளன என்று ஏடுகாட்டியும்‌; பசிகண்டு பதறாதீர்‌! பாலாறு தயாராகிறது, பாரீர்‌! என்று புள்ளி விவரம்‌ வீசுவதுமான, வேடிக்கை காட்டியும்‌ பொழுதை ஓட்டிடுவோர்‌ நடாத்தும்‌ குடி அரசும்‌ உளது.

கேடளிக்கும்‌ முடி அரசு மாற, முடிதரித்தோன்‌ மாய்ந்திடல்‌ வேண்டும்‌; ஆனால்‌ கேடளிக்கும்‌ குடிஅரசை மாற்ற மக்களுக்கு உரிமை இருக்கிறது—அறிந்து.

ஆற்றலுடன்‌ அந்த உரியமையைப்‌ பயன்படுத்த வேண்டும்‌; பயன்படுத்துவர்‌ என்ற நம்பிக்கையினால்தான்‌, குடி அரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப்போகவுமில்லை,

தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும்‌ முடிகிற காரியமா...? அதற்கேற்ற அறிவாற்றல்‌ அனைவருக்‌கும்‌ ஏற்பட்டுவிடுமோ? ஆண்டவன்‌ யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான்‌. மன்னர்கள்‌, மகேசனின்‌ அருள்‌ பெற்றோர்‌! அவனுடைய பிரதிநிதிகள்‌; என்று கூறப்பட்டது போய்‌, எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்கள்‌ என்று கூறிடத்தக்க காலம்‌ இன்று பிறந்து விட்டிருக்கிறது; என்றாலும்‌, குடி அரசு ஏற்பட்டானபிறகு, எதிர்பார்த்ததனைத்தும்‌ கிடைத்துவிட்டது என்று எவரும்‌ கூறிவிடுவதற்கில்லை.