எல்லோரும் இந்நாட்டு மன்னர்
25
துளியும் நம்பிக்கையில்லை, நானே, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல்கலைக்கழகம் குறித்து ஆழ்ந்தறிந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்; பலன் ஏதும் விளையவில்லை!!—என்று மெத்த வேதனையுடன் பேசினார்.
ஆளவந்தார்கள், குழுக்களை அமைக்கிறார்கள்; குழுக்கள் உலாவருகின்றன; உரையாடல்கள் உற்சாகத்துடன் தயாரித்து வெளியிடுகிறார்கள்; அந்த அறிக்கைகளோ குவிகின்றன; செயல்படவேண்டிய துரைத்தனமோ, துயில் கொண்டு விடுகிறது.
அறிக்கையின் மூலம் விளைவு, விரும்பத்தக்க முறையில் கிடைப்பதில்லை என்றாலும், கூர்ந்து பார்க்கக்கூடியவர்களுக்கு, நாட்டு நிலைமையையும், நாடாள்வோரின் திறனற்ற போக்கையும் எடுத்துக்காட்ட இவை பயன்படுகின்றன. அத்தகைய அறிக்கைகளிலே ஒன்றுதான், 1956—57.ம் ஆண்டு வெளிவந்தது; உழவர் பெருங்குடிமக்கள், இந்த உத்தமர்கள் ஆட்சியில் இராமராஜ்யம் என்பதே கிராம ராஜ்யம்தான் என்று தமக்குத்தாமே புகழாரம் சூட்டிக்கொள்வோர் ஆட்சியில், எத்தகைய நிலைமையிலே உள்ளனர் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.
3600 சிற்றூர்களிலே நிலைமைகளைக் கண்டறிந்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உழவுத் தொழிலில் உள்ளவர்கள், எவர், என்பதற்கு, ஆய்வுக்குழுவினர் ஒரு இலக்கணம் வகுத்துக்கொண்டு, அறிக்கை தயாரித்துள்ளனர். அந்த இலக்கணத்தின்படி. வருவாயின் பெரும் பகுதி, உழவுத் தொழிலில் கிடைக்கும் கூலியாக எவருக்கு அமைந்து இருக்கிறதோ, அவர்களே, உழவர் என்பதாகும்.
அந்த முறையில் நடத்தப்பட்ட ஆய்வு, என்ன உண்மைகளைத் தந்திருக்கிறது?
உழவர்களின் நிலைமை, நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு வருகிறது.