பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


நாங்கள் எழுத்தாளர்கள், எழுதுவது எங்கள் இயல்பு என்று பலரும் சொல்வார்கள். எங்களால் எழுதாமல் இருக்க முடியாது; அதனால் தான் எழுதுகிறோம் என்பார்கள்.

மலர்கள் பூப்பது போல, குயில்கள் பாடுவது போல, மேகங்கள் மழை பொழிவது போல நாமும் எழுதுகிறோம். மலர் ஏன் மலர்கிறது என்று மலர்களைக் கேட்கலாமா? குயில் என் கூவுகிறது என்று குயிலைக் கேட்க முடியுமா?. அவற்றின் இயல்பு அது. அதேமாதிரி தான் கவிஞர்களும், படைப்பாளிகளும் என்று சிலர் சொல்வார்கள்.

வாழ்க்கையில் எனது தேடல்களை - உண்மையின் தேடல்களை அறிவிப்பதற்காக எழுதுகிறேன்; என்னை தானே வெளிப்படுத்திக் கொள்வதற்காக எழுதுகிறேன்; என் அனுபவங்களைப் பிறருக்குப் புரிய வைப்பதற்காக எழுதுகிறேன்; என்னை நானே புரிந்து கொள்வதற்காக எழுதுகிறேன். என்னையும், உலகத்தையும், மனிதர்களையும் தான் புரிந்து கொண்ட விதத்தை - வாழ்க்கை உண்மைகளை நான் அறிந்து கொண்டபடி, - என் மனப் பதிவுகளை எடுத்துச் சொல்வதற்காக எழுதுகிறேன். மனித நாடகங்களைப் பார்த்துச் சிரிப்பதற்காக எழுதுகிறேன்; அவற்றைப் படித்து மற்றவர்களும் சிரிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன் - இந்த விதமாகபலப்பல பேசுவார்கள்.

கொள்கைக்காக எழுதுகிறேன் என்றும், லட்சியத்துக்காக எழுதுகிறேன் என்றும் சும்மா ஏனோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றும் நான் உயிரோடிருப்பதை உணர்த்துவதற்காக எழுதுகிறேன் என்றும், விதம்விதமாகசொல்லக் கூடியவர்கள் அநேகர்.