பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4



'எழுத்து' 5ஆவது இதழ் கு.ப.ரா நினைவு ஏடாக வெளியிடப்பட்டது. இந்த இதழில் கு.ப.ரா பற்றிய ஒருதலையங்கக் கட்டுரையையும் - 'இன்ப ஞாபகங்கள்' என்ற தலைப்பில் கு.ப.ராவுடன் பழகிய நாட்கள் பற்றிய ஒரு வாழ்க்கை விமர்சனக் கட்டுரையையும் சி.சு.செல்லப்பாவே எழுதியிருக்கிறார். கு.ப.ராவும் நானும்- என்ற தலைப்பில் சிட்டி எழுதிய கட்டுரையும், க.நா.சு எழுதிய 'கு.ப.ரா.வின் 'கதைகள்' என்ற விமர்சனக்கட்டுரையும் கு.ப.ரா நினைவு ஏட்டின் சிறப்பு அம்சங்களாக இடம் பெற்றிருப்பதோடு, கு.ப.ரா எழுதிய சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம் ஆகியவைகளுக்கு வகைக்கு ஒன்றாக கு.ப.ராவின் நான்கு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

எழுத்து -ஏட்டின் வளர்ச்சியில் - இந்த ஐந்தாவது இதழ்-ஒரு திருப்புமுனை போல அமைந்திருக்கிறது. ‘கலா மோகினியில்' கு.ப.ரா எழுதிய வசன கவிதை என்ற கட்டுரையை செல்லப்பா மறு பிரசுரம் செய்திருக்கிறார் இந்த இதழில்!

எதிர்காலத்தில்-எழுத்து- முழுக்க முழுக்க புதுக்கவிதை யின் மறுமலர்ச்சிக்கும் - வளர்ச்சிக்குமே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளப்போகிறது என்பதைக் கட்டியங் கூறி அறிவிப்பது போல கு.ப.ரா வின் வசன கவிதை பற்றிய கட்டுரை அமைந்திருக்கிறது.

எழுத்து - புதுக்கவிதை இயக்க வளர்ச்சிக்கான ஏடாக மாறுவதற்கான வித்து-இந்தக் கட்டுரை மூலமே விதைக்கப் பட்டது என்பதை ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலில் வல்லிக்கண்ணன் கீழ்க்கண்டவாறு விவரித்திருக்கிறார்.

"புதுக்கவிதை புதிய மறுமலர்ச்சியும், இயக்க வேகமும், வலிமையும் பெறுவதற்கு 'எழுத்து' தோன்ற வேண்டியிருந்தது.

சி.சு.செல்லப்பா 1959 ஜனவரியில் எழுத்து மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக்கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர்பார்ப்போ, ஆர்வம் மிகுந்த

151