பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

திட்டமோ கொண்டிருந்தார் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது அவசியம் முதல் இதழின் ஆசிரியப் பிரகடனத்தில் ஒலிபரப்பப்பட்டிருக்கும். ‘எழுத்து’ முதல் ஏட்டில் மட்டுமல்ல, முதல் வருடத்தின் எந்த ஏட்டிலுமே புதுக்கவிதை சம்பந்தமான அபிப்பிராயம் எதுவும் ஆசிரியர் பக்கத்திலோ, கட்டுரையாகவோ, அல்லது படைப்பாளிகளின் அபிப்பிராயமாகவோ, பிரசுரிக்கப்படவில்லை.

ஐந்தாவது இதழ் கு.ப.ரா நினைவு ஏடு. அதில் கு.ப.ரா பற்றி பலர் எழுதிய கட்டுரைகளோடு, கு.பரா.வின் படைப்புகள் ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, ஒரு விமர்சனம், ஐந்து கவிதைகள் ஆகியவை சேர்க்கப்பட்டன. கட்டுரை ‘வசனகவிதை’ என்ற தலைப்பில் கு.ப.ரா கலாமோகினியில் எழுதியிருந்தது ஆகும்” என்ற குறிப்பிட்டிருக்கிறார் வல்லிக்கண்ணன். கு.ப.ராவின் படைப்புகளில் வசனகவிதை என்ற இந்தக்கட்டுரையை மட்டும் பெயர் சூட்டிவ.க.எழுதியிருப்பது இந்தக் கட்டுரைதான் - பின்னாளில் எழுத்து புதுக்கவிதை வளர்ச்சிக்கான ஏடாகவே மாறியதற்கான முதல் அடையாளம் என்பதை அவரும் உணர்ந்திருக்கிறார் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.

எனினும் வசன கவிதை என்பதும் - புதுக்கவிதை என்பதும் ஒன்றல்ல; வேறு வேறு என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான் என்று விளக்கம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். வசனகவிதையின் தந்தை பாரதி-புதுக்கவிதையின் முன்னோடி பிச்சமூர்த்தி - என்று இனம் பிரித்துக் காட்டுபவர்களும் இருக்கிறார்கள். இதிலே செல்லப்பா ‘வசன’ கவிதை என்பது வேறு; புதுக்கவிதை என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல” என்ற கருத்தையே அழுத்தமாகக் கொண்டிருந்தார். எழுத்து ஏடுகளில் வசனகவிதை - புதுக்கவிதை பற்றி நடத்தப் பெற்ற சர்ச்சைகளுக்குத் தூண்டுகோலாக இருந்தது அதன் 14வது இதழில் பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரைதான். அந்தக் கட்டுரையின் தலைப்பும் கு.பரா. வைப் போன்றே ‘வசனகவிதை’ என்பதுதான். பிச்சமூர்த்தியின் கட்டுரை நெடுகிலும் புதுக்கவிதை என்ற சொற்பிரயோகத்தைவிட வசனகவிதை என்பதே அதிகமாக விரவிக் கிடக்கிறது.

பதினான்காவது ஏட்டில் பிச்சமூர்த்தியின் கட்டுரையை வெளியிட்ட செல்லப்பா - 15ஆவது இதழில் வசனகவிதைவேறு,

152