பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

சொல்லிவிடமுடியாது. சந்தமும் எதுகை மோனையும் சொற்கட்டும் ஒலிநயத்தை ஏற்றக்கூடியவை தான். அதை உணரச் செய்ய வைப்பவைதான். ஆனால் சீர் அசை தளைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வெளித்தெரியும் படியான தாளக்கட்டுடன் அமைந்த கவிதைகளில் விட புதுக்கவிதையில் ஒலிநயத்துக்கு இடம் அதிகம்.

‘மரபுக்கிணங்கிய கவிதைகளில் ஒலிநயம் என்று தனியாக இருப்பதாகக்கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்க இடம் இருக்கிறது'. என்று பிச்சமூர்த்தி கூறுகிறார். ‘ஒலிநயம் என்ற குணநியதியை முற்றாக புறக்கணிப்பது வசனகவிதை’ என்கிறார்.முருகையன் 'வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதற விடுவதாகும்' என்கிறார் கைலாசபதி. ஆனால் இந்த மூன்றுக்கும் பதில் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. புதுக்கவிதை முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த கு.ப.ராஜகோபாலன் எழுதியுள்ள சிலவரிகள்.

‘வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். வசன கவிதைக்கும் எதுகை மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உள்ளடக்கினது கவிதை. அது அவற்றை இஷ்டம் போல மாற்றிக்கொள்ளும் முதலில் உண்டாக்கின படியே இருக்கவேண்டும் என்றால் இருக்காது.”

கு.ப.ரா. புதுக்கவிதை முயற்சி பற்றி கூறியுள்ள இந்த வரிகள் திட்டவட்டமாகவே அதன் தன்மை பற்றி தெரிவிக்கின்றன. புதுக் கவிதையில் ஒலிநயம் இருப்பதன் அவசியத்தை அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதை வெறும் பிரமை என்று தள்ளினதாகத் தெரியவில்லை. அவர் கூறி இருப்பவைகளுடன் “ஃப்ரிவெர்ஸ்' பற்றிய சில வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் புதுக்கவிதை முயற்சி செய்பவர்களது முறையானநோக்கு புலப்படும்.

நடுவில் ஒரு வார்த்தை. வசன கவிதை என்ற பதச்சேர்க்கை பற்றி. இந்த வார்த்தை எப்படியோ உபயோகத்துக்கு வந்து விட்டது.

221