பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாதனைகள் நிறைந்த வருஷம்

புதுக்கவிதை வரலாற்றில் 1962 விஷேமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு கால கட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.

அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும். “சமீபத்தில் எழுத்து வாசகர் ஒருவர் தன் கடிதத்தில் பின் வரும் வரிகளை எழுதி இருந்தார்.

‘எழுத்து’ கவிதையில் காட்டி வரும் சாதனை நீங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாயிராது என நம்புகிறேன்.”

அவர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை...

உண்மையில், புதுக்கவிதை 1959-ல் எழுத்துவில்தான் பிறந்தது என்று சொல்ல முற்படமாட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ந.பி.யும் கு.ப.ரா.வும் வல்லிக்கண்ணனும் பிறப்பித்துவிட்ட குழந்தை அது. ஆனால் 1959 முதல் இன்று வரைய நாட்களில் தான் இந்தப் புதுக்கவிதை இடம் கண்டு பிடிக்கப்பட்டு நாமகரணமும் இடப்பட்டது.

‘வசனத்தை முறித்துப் போட்டு எழுதுவது, ‘விஜிடபிள் பிரியாணி’, ‘கோவேறு கழுதை’, யாப்பு தெரியாமல் ஏதோ கிறுக்கல்கள் என்றெல்லாம் கண்டவாறு பரிகாசத்துக்கு உள்ளாகி இருந்த ஒரு முயற்சிக்கு மதிப்பு கிடைத்துவிட்டது இந்த நாட்களில் தான். பாரதியின் ‘வசனகவிதை’ ஏற்றுக் கொள்ளப்பட்டு ந. பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும் இன்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.

238