பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இக் கூட்டம் வலுச் சேர்த்ததாகச்சொல்லாம். 'மேனாட்டு அளவுகோல்கள் இங்கு தேவையா' என்கிற கேள்வியும் எழுப்பப் படாமல் இல்லை. அநேகமாக இதெல்லாம் தீர்ந்துபோன சங்கதிதான். 'நவீன இலக்கிய வகைகளே மேல் நாட்டுத் சரக்காயிற்றே' என்கிற பதில் பல தடவை கிடைத்துவிட்டது. இனி நடைமுறை விமர்சனத்தை நோக்கி நகர்வது இலக்கியத்துக்குப் பயன்தரும்.

சென்னைப் பல்கலைக்கழக திருக்குறள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு தலைமையில் சி.சு.செல்லப்பா 'புதுக்கவிதை' பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார். தலைவரின் முன்னுரை, பின்னுரையைக் கேட்டவர்கள் புதுக்கவிதை பற்றிய பிரமைகள் மெல்ல அகன்று வருவதை உணர முடிந்தது. கட்டுக்கட்டாக கையிலே கவிதைகளை வைத்துக்கொண்டு புதுக்கவிதையின் தொனி, பொருள்பற்றி செல்லப்பா உரை நிகழ்த்துவது ஒரு இயக்கத்திற்கான அடிப்படை வலுவைச் சமைத்துக் கொடுக்கிறது. புதுக்கவிதை படைக்கும் பிறரும் இம்மாதிரி அரங்கம் ஏறினால், காலப்பபோக்கில் ‘நயாபைசா' விலிருந்து 'நயா' கழண்டதுபோல 'புதுக்கவிதை'யிலிருந்தும் கவிதை மட்டும் நிற்கும்.

நவீன இலக்கியம் பற்றிய சிந்தனைகள் பெருகி வருவதும், படைப்பாளிகளும், விமர்சகர்களும், பேராசிரியர்களும், பத்திரிகாசிரியர்களும் கலந்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்புக்கள் விரிவதும், எதையும் ஆய்வு ரீதியில் அணுகும் மனப்பான்மை தழைப்பதும் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் நல்ல அறிகுறிகளே.



Ezhutthu Edited and Published by C.S. Chellappa from
19-A, Pilliar Koil St., Madras - 5.

Printed By A. Rajaram for Ramalakshmi Press,
5, Madawalkam High Road, Madras - 10.

323