உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேகன்

27

இரங்க வைக்கலாம் என்று எண்ணினார். அந்தப் புலவர்களிடம் தம் கருத்தைச் சொன்னர். இன்னது செய்வதென்று அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்கள்.

ஒரு நாள் காலை கபிலர் தனியே சென்று பேகனைக் கண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது முதல் என் உள்ளம் அங்கேயே இருக்கிறது” என்றார் புலவர்.

“என்ன அது?” என்று கேட்டான் வள்ளல். “நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உன்னையும் உன் மலையையும் பாராட்டும் பாடல்களை ஓரிடத்திலே பாடிக்கொண்டிருந்தோம். அப்போது யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டது.”

“அழுகையா? யார் அழுதார்கள்?”

“அதுதான் தெரியவில்லை. அழுதவள் ஒரு பெண். அவள் சில வார்த்தைகளைச் சொல்லிப் புலம்பினாள். அந்தக் குரல்தான் எத்தனை மென்மையாக இருந்தது. புல்லாங்குழல் அழுவதாக இருந்தால் எப்படி இருக்கும்! அதுபோல இருந்தது. அவள் யாரோ, அவளுக்கு என்ன துயரமோ, தெரியவில்லை. உன் பேரைச் சொன்னபோது அவள் அழக் காரணம் என்ன? எனக்கு அதை நினைக்க நினைக்க மனம் உருகுகிறது” என்று நிறுத்தினார் புலவர்.

பேகன் ஒன்றும் பேசவில்லை. கபிலர் இன்னாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். புலவர் தம் கருத்தை ஒரு பாட்டாகவே பாடிவிட்டார். பேகன் சிந்தனையுள் ஆழ்ந்தான். “சரி, நான் போய் வருகிறேன்” என்று சொல்லி அவர் விடை பெற்றுக்கொண்டார்.