உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

எழு பெரு வள்ளல்கள்

அளித்தான். புலவனுக்கு வியப்புத் தாங்கவில்லை. "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்டான். அந்த வீரன் விடை கூறவில்லை. "உங்கள் பெயரைத் தெரிவிக்கலாமோ?" என்று புலவன் கேட்டான். அதையும் சொல்லவில்லை. புலவன் அந்த வீரனது பரிவையும் கொடையையும் அடக்கத்தையும் எண்ணி வியந்தபடியே புறப்பட்டு விட்டான். வழியிலே வந்தவர்களிடம் அடையாளம் சொல்லி, "அந்தக் குரிசிலை நீங்கள் அறிவீர்களோ?" என்று கேட்டான். அவர்கள், "அவன் தான் இந்தத் தோட்டி மலைக்குத் தலைவன்; கண்டீரக் கோப் பெருநள்ளி" என்றார்கள். அதைக் கேட்டு அயர்ந்து போனான் புலவன்.

இவ்வாறு ஓர் அழகிய வரலாற்றை அமைத்து வன்பரணர் நள்ளியென்னும் வள்ளலைப் பாராட்டி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் புகழுக்கு உரிய நள்ளியென்னும் வள்ளல் கண்டீர நாட்டின் தலைவன். அந்த நாட்டில் முல்லை நிலமாகிய காடுகள் மிகுதி. அதனால் முல்லை நில மக்களாகிய ஆயரும் அவர்கள் காப்பாற்றி வரும் பசுமாடுகளும் அதிகம்.

காக்கைபாடினியார் என்பவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகை என்ற நூலில் இருக்கிறது. வெளியூர் போயிருந்த தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. ஒரு நாள் அவள் வீட்டில் காக்கை விடாமல் கத்திக் கொண்டிருந்தது. காக்கை கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்று சொல்வார். தன் கணவன் அன்று நிச்சயமாக வருவான் என்று நம்பி எதிர்பார்த்திருந்தாள் அவள். அவன் வந்துவிட்டான். அவளுக்குக் கரைகடந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.