பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

31


சோர்வால் அப்படியே தூங்கி விட்டார். விடிந்ததை உணர்ந்து எழுந்தார்.

ஆயிரம் சோடிசெருப்புக்கள் தைக்கப்பட்டு அடுக்கடுக்காகக் கட்டி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தார். ஏது. இவை? எங்கிருந்து வந்தன என்று திகைத்தார். இறைவனே நமக்காக இவற்றைத் தைத்து வைத்துள்ளான் என்று தெரிந்து கொண்டார்.

துரோணரின் உத்தரவுப்படி குறித்த நேரத்தில் ஆயிரம் சோடியையும் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தார் சேதா!

சேதாவின் செயல் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக அவன் மேல் சினம் கொண்டார் துரோணர். தம் கை வலிக்கும் வரைக்கும் சேதாவைத் தடியால் அடித்தார். சேதா அலுங்காமல் குலுங்காமல் நின்றார். ஏன் நிற்கமாட்டார்? அடியெல்லாம் இறைவன் அல்லவா தாங்கிக் கொண்டான். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தா, தந்தையின் கொடுமை கண்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டாள். தன் பக்தை வீட்டுச் சிறையில் உண்ணாமல் உடல் வருந்துவதை இறைவன் பொறுப்பானோ?

வீட்டுக்கதவு தானாகவே திறந்து கொண்டது. சாந்தா வெளியேறினாள்.

சாந்தா தப்பி விட்டதை அறிந்த துரோணர்க்கு அடங்காச் சினம் மூண்டது.

துரியோதன மன்னனிடம் சென்று, “இந்தச் சேதா ஏமாற்றுக்காரன். மாயா ஜாலம் தெரிந்து வைத்து, பக்தனைப் போல் நடித்து மக்களை ஏமாற்றுகின்றான். தாழ்குலத்தானாகிய இவனுக்குக் கடுமையான தண்டனை தரல் வேண்டும். தண்டனை தாராவிடின், நான் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று சூள் உரைத்தார்.

ஆசாரியன் வாக்கைச் சீடன் மீறலாமா? “இந்தச் சேதாவின் கண்களைப் பிடுங்கிக் கைகளை வெட்டி விடுங்கள்” என்று உத்தரவிட்டான் துரியோதளன்.