பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூதுரை

உரை


வலிமை பொருந்திய அழகிய உடலினையும் தும்பிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை மலர் கொண்டு வழிபாடு செய்பவர்க்குச் சொல்வளம் உண்டாகும்; இலக்குமியின் கருணையால் செல்வம் உண்டாகும்; உடல் நலமும் உண்டாகும்.

1. தென்னைமரம் வேரால் உண்ட நீரை இனிய சுவையுடைய இளநீராக்கி முடியாலே தருகின்றது. அது போல, நாம் பிறர்க்குச் செய்யும் உதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும். ஆதலால் என்றும் நன்மையே செய்க.

2. பிறர் தமக்குச் செய்த உதவியை நல்லோர் தம் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டார். பிறர் தமக்குச் செய்த உதவியைத் தீயோர் நீர்மேல் எழுத்துப் போல் உடனே மறந்து விடுவர்.


3. காலமல்லாத காலத்தில் பூத்த மலரும் கணவன் இல்லாத பெண்ணின் அழகும் பயன்படாவாம். அவை போல். இளமையில் வறுமையும் முதுமையிற் செல்வமும் பயன்படாவாம்; துன்பம் செய்யும்.

4. பாலைத் தீயிலிட்டுக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கினைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தையே தரும். அவைபோல மேன்மக்கள் துன்பம் வந்த போதும், தம் உயர் குணத்தினின்றும் மாறுபடார்; கீழோர் கலந்து பழகினாலும் நண்பர் ஆகார்.

5. கிளைத்துத் தழைத்த வளமான மரங்களாயினும் அவை பழுக்குங்காலம் வந்தாலன்றிப் பழுக்க மாட்டா. அது போல, கைகூடும் காலம் வந்தாலன்றி, எச்செயலும் எவ்வளவு முயன்றாலும் கை கூடாது; ஆகையால் காலமறிந்து செய்க.


6. கல்லால், ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல, மானம் உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரை விட்டு மானத்தைக் காப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/32&oldid=1332721" இலிருந்து மீள்விக்கப்பட்டது