பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
“சங்கத் தமிழ் மூன்றுந் தா"
 
மூதுரை
 
ஔவையார் இயற்றியது.
 
கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

 

நன்மை செய்தால் நன்மை வரும்


1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி -
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நல்லோர்க்குச் செய்த உதவி நிலையாக நிற்கும்

2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

இளமையில் வறுமை

3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்புத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு

மேன்மக்கள் இயல்பு

4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் :
நட்டாலும் நண்பல்லார் - நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

காலமறிந்து செய்தல்

5. அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தா லன்றிப் பழா,

உயிரினும் மானம் பெரிது

6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/33&oldid=1332722" இலிருந்து மீள்விக்கப்பட்டது