உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

ஏ, தாழ்ந்த தமிழகமே?

இப்படிப்பட்ட பாராட்டுதல் விழா நடத்துவது பற்றி பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் கலந்து வருகிறது. பலர் படித்தவர்கள், கட்சிக் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறுகிறார்கள், புரட்சி கவிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது, தலைவர் அவர்கள் எடுத்துக் காட்டியது போலக், ‘கவிஞர் மாத்திரம் ஓர் கட்சியின் கவி; குறிப்பிட்ட கொள்கைக்காகத் தனது கற்பனா சக்தியையே பாழ்படுத்துகிறவர்; வகுப்புவாதத்தை வளர்க்கிறவர்; நாத்திகர்' என்று மாத்திரம் ஒரு சிலரால் தூற்றப்படாமல் இருந்தால், அவரது எழுத்துக்கள் ஒல்வொன்றும் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும். அவர் அப்படியே இருந்தாலும் இருப்பதற்குக் காரணம் அவரது இயற்கையல்ல. இந்தத் துரதிர்ஷ்டவசமான நாட்டிலே நானாவிதமான கட்சிகள் நடமாடுகின்றன. அக்கட்சிகள் என்னும் கூடாரத்திலே கவிகள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற, வெட்ட வெளியிலே கொண்டுவந்து உலவச் செய்ய, தமிழர்களுக்குப் போதிய உள்ளம் இருக்குமானால், நாங்கள் தடை சொல்ல மாட்டோம். அந்தக் கட்சிக்கவி என்று சொல்லப்படுபவரிடம் சொல்பவர்கள் கட்சி பேதமின்றிக் கவி என்பதற்காக மட்டும் அன்பு செலுத்தினால் போதும்; இன்பம் பெறலாம்.

எதற்காக?

புரட்சிக் கவிஞரின் கருத்தோவியங்களைப் பற்றி அறிஞர் சிதம்பரநாதனைப் போன்றவர்கள்தான் பேசுவது பொருத்தமாகும். ஆனால், என்னைப்போல் அவரது கொள்கையைக் கடைப்பிடித்து, நண்பர் தண்டபாணி குறிப்பிட்டதுபோல் அவருக்குத் தோழனாகவும் இருந்து, அவரது கருத்துக்களை ஏட்டிலே தீட்டியும், நாட்டிலே பேசியும், செயலிலே காட்டியும் வருபவர்கள் உரிமைக்காகக் பேசலாம். ஆகவே நானும் உரிமைக்காகக் கவிஞரின் படத்தைத் திறந்துவைக்க அருகதையுள்ளவன். அப்படித்திறந்து வைக்கும்போது, கவிகண்ட நுட்பத்தைப்பற்றியோ, கலை நயத்தைப் பற்றியோ, காவிய