பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



106

ஐங்குறுநூறு தெளிவுரை


'ஆமூர் அன்ன நலம்பெறு சுடர்நுதல்' என்றது, என்றும் எதனாலும் ஒளிகுன்றா நுதல் என்றதாப; அதுவும் ஒளிகெட்டது; எனவே, இனித் தேற்றித்தெளிவித்தல் அரிது என்றும் உணர்த்தினளாம்.

'தேற்றிய மொழி முன்பும் நிலையான பயன் தந்ததின்று; அதனை நீ பொய்த்தே ஒழுகினாய்; இனியும் எமக்குப் பயன் தருவதின்று ; நின் இயல்பறிந்த யாம், அதனை நம்புதலிலோம் என்பதும் ஆம்.

மேற்கோள்: 'இதனுள், இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே, சோர்வுகண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும், இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தரும்? எனத் தோழி, தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க' என இச் செய்யுளை, 'சூள் நயத்திறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பதனுரையில் நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 9).

57. நயம் உடையாளோ அவள்?

[{gap}} துறை : தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்டுத், தோழி அவனை வினாவியது.

[து. வி. : 'தலைவன் புறத்தொழுக்கம் உடையனாயில்' எனக்கேட்ட தோழி, அவனையே அதுபற்றிக் கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பலஞ் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,

அனைநலம் உடையளோ- மகிழ்ந! - நின் பெண்டே?

தெளிவுரை: ஆம்பற்பூக்கள் நிறைந்திருக்கும் வயல்களையுடையது தேனூர் ஆகும். அதனைப் போன்ற சிறப்புடையதான இவளின் (தலைவியின்) அழகெல்லாம், பகற்போதிலே தோன்றுகின்ற பலவான சுடர்களையுடைய தீயிடத்தே சிக்கினாற் போன்று முற்றவும் வெந்தழியுமாறு, நீயும் இவளைப் பிரிந்தனை. மகிழ்நனே! அப்படிப் பிரிதற்கு நின்னைத் தூண்டிச் செலுத்தும் அத்துணைப் பேரழகு உடையவளோ நின் பெண்டு?' (பரத்தை). அதையேனும் எனக்குக் கூறுவாயாக!

கருத்து: 'தலைவியை விடவும் அப்பரத்தை அழகானவளோ?" என்றதாம்.