பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. கிழத்தி கூற்றுப் பத்து

இதன்கண் வரும் பத்துச் செய்யுள்களும், தலைவியின் பேச்சாகவே அமைந்தவை; ஆதலின், இப்பகுதி இப் பெயர் பெற்றது. இவற்றால், உயர்பண்பும், கற்புச்சால்பும், குடிப்பிறப்பும் உடையாளான தலைவியின், செறிவான பெருமிதம் நிரம்பிய உள்ளப்போககும், தகுதிமேம்பாடும் நன்கு காணலாம்.

1. நல்லோர் வதுவை விரும்புதி!

துறை : 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையை விட்டு, சின்னாளில் மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள், அவன் மனைவயின் புக்குழிப்புலந்தாளாக, 'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' என்றாற்கு, அவள் சொல்லியது.

[து. வி.: தன்னைப் பிரிந்துபோய்ப் பரத்தையொருத்தியின் மையலிலே தலைவன் சிக்கிக் கிடந்ததால், தன் மனம் தாங்கொணா வேதனையுற்றிருந்தவள் தலைவி. அவள், அவன், அந்தப் பரத்தையைக் கைவிட்டு வேறொரு பரத்தையை நாடி வதுவை செய்தான் என்றும் கேட்டாள். அப்போது, தலைவனும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியோ முகத்தைத் திருப்பிக்கொள்ளுகின்றாள். தலைவன் 'நடந்தது நடந்துவிட்டது; இனி அவ்வாறு நிகழாது; என்னை மறாதே இவ்வேளை ஏற்றுக்கொள்' என்று பணிவோடு வேண்டுகின்றான். அவனுக்குத், தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கைவண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி

வதுவை யயர விரும்புதி நீயே!

தெளிவுரை : மணமிகுந்த வடுக்களையுடைய மாமரத்திலே நன்கு விளைந்து கனிந்து, கீழே விழுகின்ற இனிய பழமானது,