பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

133


விளக்கம்: 'பரத்தையோடு புனலாடினை' எனத் தோழி சொல்ல, அது உண்மையேயாயினும், அதனை மறுத்துப் பேசிச் சாதிக்க முயல்கின்றான் தலைவன். அவன் பொய்ம்மையை மறுத்துத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். கண்டாரும் பலர்; ஊரிடத்தே அலரும் எழுந்து பரவுகின்றது; இனியும் மறைப்பது பயனில்லை என்றது இது. "தொன்னிலை மருதத்து பெருந்துறை’ என்றது, வையையின் திருமருத முன்துறையைச் சுட்டுவது மாகலாம். செயலும் பழிபட்டது. அதனை ஏற்று வருந்தித் திருந்தும் தெளிவின்றிப் பொய்யும் உரைப்பாய்; நீ நாணிலி; எம்மால் ஏற்கப்படாய் என்பது கருத்து.

76. அந்தர மகளிரின் தெய்வம்!

துறை: மேற்செய்யுளின் துறையே.

பைஞ்சாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின்
தண்புன லாடித், தன் னலமேம் பட்டனள்
ஒண்தொடி மடவரல்,நின்னோடு,

அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.

தெளிவுரை: பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலோடும் பசுமலர்போலும் சுணங்கினையும் கொண்டவள் ஒருத்தி. ஒள்ளிய தொடியணிந்த மடவரலான அவள், நின்னோடும் குளிர்புனலிலே நீராட்டயர்ந்து, அந்தர மகளிர்க்குத் தெய்வமே போன்ற கவினையும் பெற்றுத், தன் நலத்திலேயும் மேம்பட்டவ ளாயினளே!

கருத்து : 'ஊரறிந்த இதனையுமோ மறைக்க முயல்கின்றனை' என்றதாம்.

சொற்பொருள்: பஞ்சாய்க் கோரை ஒருவகை நெடுங்கோரை; பசுமையான தண்டுள்ளது. பசுமலர்ச்சுணங்கு - புதுமலர் போலும் தேமற்புள்ளிகள்; பசு - பசும்பொன்னைக் குறித்துச் சுணங்கின் பொன்னிறத்தைச் சுட்டும். அந்தர மகளிர் வானமகளிர்: என்றது தேவலோகத்து மகளிரை. தெய்வம் அவர் போற்றும் தெய்வம்.

விளக்கம் : தலைமகனோடு புனலாடிய களிப்பால் பேரழகு பெற்றுச் சிறந்தாளின் வனப்பைக் கண்டு, அந்தர மகளிரும் மயங்கி, அவளை நீருறை தெய்வமோ எனக்கொண்டு போற்று