பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



134

ஐங்குறுநூறு தெளிவுரை


வாராயினர் என்பது, இகழ்ந்து கூறியதாம். பரத்தையைப் புகழ்வதேபோல பரத்தை தலைவனோடு புனலாடி நலத்தால் மேம்பட்டுத் தெய்வமாயினாள் என்றது. அவன் காதற் பரத்தையாகியதால், பிறரால் மதித்துப் போற்றப்பெறும் நிலைக்கு உயர்ந்தாள் என்றதுமாம். ஆகவே, அவளுள்ள போதிலே, நீதான் இங்கு வந்து வேண்டுதல் எதற்கோ என்று மறுப்புக் கூறியதுமாம்.

77. செல்லல் நின் மனையே!

துறை: முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்’ என உட்கொண்ட பரத்தை, புதுப்புனல் ஆடப்போது என்ற தலைமகற்குச் சொல்லியது.

[து. வி.: ஊடுதலும் ஒதுங்குதலும் பரத்தையர்க்கும் உள்ளனவே. 'தலைமகன் தன் மனைவியோடு கூடிப் புனலாடினான்' என்று கேட்டு, அதனால் மனமாறுபட்டிருந்த அவன் பரத்தை, அவள் நீராடிவரப் புறப்படுவாய் என்று அவளை அழைக்கவும், மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும். ]

அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்;
பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி,
நின்னொடு தண்புனல் ஆடுதும்;

எம்மொடு சென்மோ. செல்லல்நின் மனையே!

தெளிவுரை : மகிழ்நனே! நீதான் வாழ்வாயாக. நினக்கு யாம் சொல்லும் இதனையும் கேம்பாயாக. இப்பேரூர் முற்றவும் அலருரை எழுமாறு, நீர் அலைத்தலரலே கலங்கி, நின்னோடு கூடியவராக யாமும் குளிர்புனல் ஆடுவோம்; நின் மனைக்குமட்டும் இனிச் செல்லாதே: எம்மோடு எம்மனைக்கே வருவாயாக!

கருத்து: 'எம்மை விரும்பின், நின் மனைக்குப் போதலைக் கைவிட வேண்டும்' என்றதாம்.

சொற்பொருள் : மொழிவல் - சொல்வேன். கலஙகி - நீரலைத்தலாற் கலங்கி. சென்மோ- செல்வாயாக; மோ : முன்னிலை அசை.