பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



144

ஐங்குறுநூறு தெளிவுரை


விளங்கும் குளிர்நீர்க் குளத்தைப்போல, பலரும் தழுவிக்கிடந்து நுகரும் நின் பரத்தைமை கொண்ட மார்பினைப், பிற மகளிர் சிறப்பித்துக் கூறுவதைச் செவியாற் கேட்டாலும், சொல்லுதற்கரிய கடுஞ்சினம் கொள்வோளான நின் தலைவி, நின் மார்பிற் காணும் இப்புணர்குறிகளைக் கண்ணாற் கண்டனளாயின். என்ன நிலைமையள் ஆவாளோ?

கருத்து: 'அவள் துடிதுடித்துப் போவாளே" என்றதாம்.

சொற்பொருள்: சொல் இறந்து - சொல்லும் அடங்காமற் படிக்கு. வெகுள்வோள் - சினங்கொள்வோள்: என்றது தலைவியை. ஐம்பால் - கூந்தல்; ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தலையுடையது. பரத்தை மார்பு - பரத்தையுடைய மார்பு; என்றது தலைவனின் மார்பினை. உண்ணல் - நுகர்தல்; மார்பை உண்ணலாவது, அணைத்துத் தழுவி மகிழ்தல்.

விளக்கம்: பிற மாதரோடு நீ தொடர்புடையை எனக்கேட்டாலே சொல்ல முடியாத சினம் கொள்பவள், நீ புணர் குறியோடும் வருகின்ற நிலையையும் கண்டால் என்னாகுவளோ? ஆதலின், இவ்விடம் விட்டு அகன்று போவாயாக என்பதாம். 'மகளிர் நீராடும் தண்கயம்' என்று உவமித்தது, அவர் கழித்த மலரும் சாந்தும் கொண்டு அது விளங்கும் தன்மைபோல, அவன் மார்பும் அவற்றோடு சேர்ந்ததாக விளங்கிற்று என்றற்காம். மகளிர் தைத்திங்கள் தண்கயம் ஆடி நோன்பு பூணல் தமக்கேற்ற துணைவரைப் பெருதற் பொருட்டாதலின், அவர், நின்' மாரிபினையும் விரும்பியாடி நின்னைத் தம் புகலாகப் பெற்றனர் என்பதுமாம். 'என்னாகுவள் கொல்?' என்றது, உயிர் நீப்பள் என் எச்சரித்ததாம்.

இவராடிய குளம் எனப் பிறர் ஒதுக்காது, தாமும் புகுந்து நீராடலே போல, நின் மார்பைப் பரத்தையர் பலர் முன் தழுவினர் என்பதறிந்தும், புதியரும் நீ தரும் இன்பத்திற்கும் பொருளுக்குமாக நின்னை வெறாது விரும்பித் தழுவி இன்புறுத்துவர்; ஆயின், அது தலைவியின்மாட்டும் கருதினையாயின் பொருந்தாது என்கின்றனள். இதனால், தோழி வாயில் மறுத்தாள் என்பதும் அறியப்படும்.

85. நின்னைக் காண்பவர் சிரியாரோ?

துறை : தலைமகன் பரத்தையர் மேற் காதல்கூர்ந்து நெடித்துச் செல்வுழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.