பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மருதம்

149


88. யாம் அது வேண்டுதும்!

துறை: தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பில்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது.

[து. வி.: 'தன்னிடமிருந்து தலைவனை முற்றவும் பரத்தையால் பிரித்துக்கொள்ள முடியாது’ என்றும், அவள் விருப்பம் என்றும் நிறைவேறாது இடையிற் கெடும்’ என்றும் தலைமகள் சொன்னாள். அதனைக் கேட்ட பரத்தை, தன்பாற் சொல்லியதன் பாங்காயினார்க்குத் தன்னுடைய மேம்பாட்டைச் சொல்லுவதாக அமைந்த, செய்யுள் இது.]

வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்டுறை யூரனை எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுது மென்பது
ஒல்லேம் போல், யாம் அதுவேண் டுதுமே.

தெளிவுரை : வளமான நீர்த்துறைகளினிடத்தே எல்லாரும் விருப்போடே வேண்டியவளவு கொய்துகொள்ளுமாறு வளவிய மலர்கள் மிகுதியாகப் பூத்திருக்கும் பொய்கையின், தண்ணிய நீர்த்துறையினையுடைய ஊரன் தலைவன். “அவனை எம்மிடத்தேயே வருதலை வேண்டுகின்றேம்' என்று, என் தங்கை புறங்கூறினாள்” என்பர். யாம் அதற்கு விரும்பாதேம்போலப் புறத்தே காட்டிக் கொள்ளினும், உள்ளத்தே, அதனை நிகழ்தலையே வேண்டுகின்றேம்!

கருத்து : "அவனை எம்மிற் பிரியாதிருக்கச் செய்தலையே' யாமும் வேண்டுகின்றேம் என்றதாம்.

சொற்பொருள் : வண்டுறை - வளவிய துறை: வளமை நீர் என்றும் வற்றாதிருக்கும் தன்மை. 'வண்டு உறை நயவரும்’ எனக்கொண்டு, வண்டினம் நிலையாகத் தங்குதலை விரும்பும் என்பதும் பொருளாதல் கொளக்கூடும். 'வளமலர்' என்றது, செழுமையும் செறிவும் மிகுதியாகி அழகோடு மலர்ந்திருக்கும் நாளின் புதுமலர்களை. எவ்வை: 'எம் அவ்வை' எவ்வை என்று ஆயிற்று. தலைவனைத் தானும் அடைந்துள்ள முறைபற்றித் தலைவியைத் தன் மூத்தாளாகக் கொண்டு கூறியதாம். 'எவ்வை' என்றதற்கு, எவ்வகையினும் எனப் பொருள்