பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

181


[து. வி.: தோழி அறத்தொடு நின்றனள். உண்மையுணர்ந்த செவிலியும், பிறரை அறிவுறுத்தி வரைவுடம்படச் செய்தனள். திருமணமும் நிகழ்கின்றது. அப்போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் தன் காதலனருகே அமர்ந்திருக்கும் தலைவியைத் தன் தாய்க்குக் காட்டித், தோழி, பொங்கும் உவகையோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அன்னை வாழி! வேண்டு அன்னை - புன்னையோடு
ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்கமைந் தனனால் தானே

தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே!

தெளிவுரை : வாழ்க அன்னையே! இதனையும் விருப்போடே காண்பாயாக. புன்னையோடு ஞாழலும் பூத்து மலர்ந்திருக்கும் குளிர்ந்த அழகிய கடற்றுறைக்கு உரியவன் தலைவன். அவன் இவளுக்கே உரியவனாக, இப்போது இவ் வதுவையாலே பொருந்தி அமைந்துவிட்டனன். அதனாலே, இதுவரையும் இவளையகன்று மறைந்திருந்த இவளது மாமைக்கவினும், இப்போதில், தானாகவே வந்து இவள் மேனியிலே பொருந்தி அமைந்துவிட்டதே!

கருத்து: 'தலைவியின் களிப்பைக் காண்க' என்பதாம்.

சொற்பொருள் : ஞாழல் - புலிநகக் கொன்றை. அமைந்தனன் - மணவாளனாகிப் பொருந்தினன். மாமைக்கவின் - மாந்தளிரன்ன மேனியழகு.

விளக்கம்: 'புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்' என்றது, இவள் தன் இல்லறத்திலும் பலவகை நலனும் ஒருங்கே சேர்ந்து அமைந்து களிப்பூட்டும் என்றதாம். 'இவட்கு அமைந்தனனால் தானே' என்பதற்கு, 'இவளுக்கு எல்லாவகையானும் பொருத்தமான துணைவனாக அமைந்தனன் அல்லவோ?' எனக் கேட்பதாகவும் கருதுக.

உள்ளுறை: 'புன்னையொடு ஞாழல் பூக்கும்' துறைவனுடன், மணத்தால், உவந்து பலரும் வாழ்த்துரைக்க ஒன்று பட்டதனால், இனி இரண்டு குடும்பத்தின் பெருமையும் உயர்ந்து ஓங்கி, உலகிற் புகழ்பெறும் என்பதாம்.

மேற்கோள்: 'இது வதுவை நிகழா நின்றுழி. தாய்க்குக் காட்டித் தோழி கூறியது' என்று நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டுவர் -(தொல். களவு. 24.).