பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



180

ஐங்குறுநூறு தெளிவுரை


விளக்கம்: தான் விரும்பும் மீனைப் பற்றுவதற்கு, இடையறாது முயன்று, உயரவும் தாழவுமாகப் பறந்து வருந்தும் கடற்பறவைகள் போலத், தலைவியும் தலைவனின் வரவை எதிர் பார்த்துக் கானற்சோலைக்குப் பலநாள் சென்றும், அவனைக் காணமாட்டாதே துன்புற்று வருந்துவாளாயினள் என்கின்றாள். அது நீங்க, 'அவன் தேர் வந்தது' என்றும், அவள் உள்ளமும், அவளுக்காக வருந்தும் தன்னுள்ளமும், அவள் நலனே நாடும் பிறர் உள்ளமும் இன்புறத் தேர்மணிக்குரல் கேட்பதாயிற்று எனவும், தோழி சொல்லுகின்றள்.

'புள்ளின் ஆனாது இசைக்கும் குரல்' என்று கொண்டால், பொருள் சிறவாது. அவ்வாறாயின் அவன் இரவுப்போதிலே வருவதாகவும், அவன் தேர் வரவாற் கானற்சோலையிலே டங்கியிருந்த புள்ளினம் அஞ்சிக் குரலெழுப்பும் எனவும் பொருள்கொள்ள வேண்டும். முன்னர்க் களவுக்காலத்தே இரவுக்குறியிடத்தில் அவன் வந்து போயின்போது நிகழ்ந்ததனைக் கண்ட தலைவி, பின்னரும் இரவுப்போதெல்லாம் கண்ணுறங்காளாய்ப், புட்குரல் கேட்கும் போதெல்லாம், தலைவன் வந்தனன் எனவே மயங்கி எதிர்பார்த்து, வராமையாலே வருந்தித் துன்புற்றுத் துயரடைவாளாயினள் என்றும் கொள்ளல் வேண்டும். 'வரைதற்கு வருபவன் பலரும் அறியப் பகற்போதிலேயே வருவன்' என்பதால், இது பொருந்தாது. என்க.

'அவன் தேர்வரவால் அஞ்சியெழுந்து ஒலிக்கும் புட்களின் அந்தத் துயரம் நீங்குமாறு' என்னின், முன்னர் அரைஞ்சி மணிநா தகைத்துவிடுதலாற் பறவையினம் துயருற்றன; இனி மணிக்குரல் கேட்கவே அவை துயரற்றன எனவும் கொள்ளலும் பொருந்தும்.

உள்ளுறை: 'கடற்புள்ளின் துயரம் நீங்க, அவன் தேரின் மணிக்குரல் இசைத்தது' என்பதற்கு, இடையறாதே அலருரை கூறிக்கூறித் திரிந்த அலவற்பெண்டிர்களின் வாயடங்க, அவன் வரைவொடு, ஊரறியத், தன்பெருமிதம், தோன்ற வந்தனன் என்பதும் உள்ளுறை பொருளாகக் கொள்க.

103. தானே அமைந்த கவின்!

துறை: அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டி, உவத்து சொல்லியது.