பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

ஐங்குறுநூறு தெளிவுரை


எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்

மாயோள் பசலை நீக்கினன், இனியே!

தெளிவுரை : எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் வளைக்கும் துறைவன், இப்போது, மாமை நிறத்தாளான இவளின் பசலை நோயினையும் நீங்கச் செய்தனனே!

கருத்து: 'இவள் இனி இன்பமே காண்பாள்' என்றதாம்.

சொற்பொருள் : ஓதம் - கடல் நீர். வாங்கும் - வளைத்துக் கொள்ளும். மாயோள் - மாமைக் கவினுடையாளான தலைவி. நீக்கினன - நீங்கச் செய்தனன்.

விளக்கம்: கடல் நீர் பொங்கியெழுந்து மோதுதலால், ஞாழலின் பெருஞ்சினையும் வளைந்து தாழும் என்றது. அடிமண் அரிப்புறலால் என்று கொள்க. இவ்வாறே தலைவியின் தமரும் சான்றோரின் பேச்சுக்களால் தம் உறுதியினைத் தளர்த்தினராக, வரைவுக்கு உடன்பட்டனர் என்றும் கொள்க. 'நீக்கினன்' என்று இறந்தகாலத்தாற் கூறினாள், நீங்குதல் விரைவிலே நிகழும் என்னும் உறுதிபற்றியாகும். இறந்தகாலம் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள என்மனார் புலவர்' என்ற விதியைக் காண்க - (தொல். சொல். 243).

உள்ளுறை : ஞாழற்சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வராத தலைவியின் சுற்றத்தாரைச் சான்றோர் மூலம் தன் வழியாக்கும் உறுதியினன் தலைவன் என்று கூறி, அவன் உறுதிக்கு வியந்ததாம். இதனைக் கேட்கும் தலைவியும், தன் மனக்கலக்கம் நீங்கி மகிழ்வடைவாள் என்பதாம்.

146. கவின் இனிதாயிற்று!

துறை : வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, 'நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ' என்று ஐயுற்றிருந்த தலைமகள், வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.

[து. வி. : வரைவினைத் தலைவி பலகால் வேண்டியும், தலைவன் வரையாதே ஒழுகிவர, அதனால் 'அவன் நினைவுதான் என்னவோ?' என்று வேதனைப்பட்டிருந்தாள் தலைவி. ஒரு நாள், அவன் வரைவொடு தன் மனைக்கண் வரக்கண்டவள், தோழிக்கு மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]