பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: வரைந்து மணந்துகொண்டபின் தலைமகனும் தலைமகளும் பள்ளியிடத்து இருந்தவிடத்தே, அவர்களின் களவுக் காலத்துக்கு உறுதுணையாயிருந்த தோழி, தலைவனை வேண்டி வாழ்த்துவதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழற் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு

அணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ!

தெளிவுரை : எக்கரிடத்து ஞாழலின் பூவைப்போலச் சுணங்குகள் படர்ந்துள்ள, இளைய முலைகளையுடைய மடந்தையான இவளுக்கு, வருத்தத்தை வளரச்செய்து, இவளைப் பிரிதலை ஒருபோதும் மேற்கொள்ளா திருப்பீராகுக!

கருத்து: 'என்றும் பிரியாது இவளை இன்பமாக வைப்பீராக' என்றதாம்.

சொற்பொருள்: சுணங்கு - அழகுத்தேமல்; ஞாழற்பூவின் அன்ன சுணங்கு என்றதால், இளமஞ்சள் நிறத்துப் பொட்டுப் பொட்டாகப் படர்ந்து அழகுசெய்வது என்க. இளமுலை இளமைக் கவின் கொண்ட முலை. அணங்கு வளர்த்தல் வருத்தம் வளரச் செய்தல். வல்லாதீமோ - வன்மையுறாதிருப்பீராகுக.

விளக்கம் : 'வல்லாதீமோ' என்றது, அத்தகு வன்கண்மை என்றும் பேணாது ஒழிவீராக என்றதாம். 'சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த்தலைச் செய்யாதீராகுக' என்று சொல்லும் சொல்நயத்தோடு, மனமுவந்து வாழ்த்தும் மனத்தையும் காண்க. அருமையான திருமண வாழ்த்துக்கள் இவை.

மேற்கோள்: தலைவனைப் பாங்கி வாழ்த்துதலுக்கு எடுத்துக்காட்டுவர் நம்பியுரைகாரர் - (கற்பு. 4.).

150. புணர்வின் இன்னான்!

துறை: முன்பொருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்தழி, அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்?' என்று வினவிய தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது.