பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

239


தெளிவுரை : வெள்ளாங்குருகின் பிள்ளை போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது, அதன் பிள்ளையில்லாமை நோக்கிச் செயலற்று ஒலித்தபடி இருக்கும் கானலைச்சேர்ந்த கடற்றுறை நாட்டின் தலைவன், அவளையும் போய் வரைந்து கொள்வான் என்பார்கள். அவன் என்பாற்கொண்டுள்ள அருளுடைமையும் அச்செயலே! அவன் துணையற்ற பரத்தையர்க்குத் துணையாகி உதவும் அறவாளன் போலும்!

கருத்து 'அன்பும் அறமும் மறந்தானுக்கு அகம் கொள்ளேன்' என்றதாம்.

சொற்பொருள்: கையறுபு இரற்று - செயலற்றுத் துயரக் கூப்பீடு செய்யும். இரற்று கானலம் புலம்பு - அவ்வொலி கேட்டபடியே இருக்கும் கானற்சோலையைக் கொண்ட கடற்கரை நிலப்பாங்கு. புலம்பு - கடல் நிலம். அறவன் - அறநெறி பேணுவோன்; அருள் - அனைத்துயிர்க்கும் இரங்கி உதவும் மன நெகிழ்ச்சி.

விளக்கம்: குருகின் பிள்ளைபோலும் எனக் கருதிக் காணச் சென்ற நாரையானது, அவ்விடத்தே துயருற்று அரற்றும் குரலொலி கேட்டபடியே இருக்கும் கானற்சோலை என்க. 'வரையும்' என்ப என்றது. தான் விரும்பிய பரத்தையை வரைந்து இற்பரத்தையாக்கிக் கொள்ளப் போகின்றான் எனப் பிறர் கூறிய செய்தியாகும். அவனோ அறவன், அவன் அருளும் அதுவே அன்றோ? எனவே, அவனை இனி யான் விரும்பேன் என்கின்றனள்.

உள்ளுறை: தானறிந்தாளின் உறவல்லளோவென்று அருளோடு காணச்சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி மீளவகையின்றி அரற்ற, அக் குரல் ஊரெல்லாம் ஒலிக்கும் அலராயிற்று என்று உள்ளுறுத்துக் கூறுவாள், 'காணிய சென்ற மடநடைநாரை கையறுபு இரற்று கானல் அம் புலம்பு அந்துறைவன்' என்கின்றனள்.

மேலும் அவன், அவளை வரைந்து உரிமையாக்கிக் கொள்ளப் போவதையும் சொல்லி, அவன் தன்பால் அருளற்றவனானதையும், கொண்ட மனையாளை நலிவிக்கும் அறமிலாளன் ஆயினமையும் சொல்லித், தான் அவனை ஏற்க விரும்பாத மனநிலையையும் விளக்குகின்றாள் தலைவி என்று கொள்க.