பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

ஐங்குறுநூறு தெளிவுரை


தங்கியிருப்பவ னாகிவிட்டான் என்று உள்ளுறை பொருள் தோன்றக் கூறுகின்றாள்.

பரத்தையிடத்தே இவன் காலையில் போகவிட்ட வாயில்கள், அவள் இசைவினை மாலைவரையும் பெறாதே வருந்தி, இரவிலும் இசைவுவேண்டி அங்கேயே துயில்வாராயினர் என்றதாகவும் கொள்க.

மேற்கோள்: வாயில்வேண்டி ஒழுகுகின்றான், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைவி, அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது இது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு 6).

158. எம் தோழி துயரைக் காண்பாயாக!

துறை : பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி, தலைமகற்கு வாயில் மறுத்தது.

[து. வி.: பரத்தை புலந்த போதிலே, தான் தன் மனைக்குப் போவது போலக் காட்டினால், அவள் புலவி தீர்வாள் என்று நினைத்து வந்தான் தலைவன். அவன் வந்த குறிப்பறிந்த தோழி, வாயில் மறுப்பாளாகக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிகும்

அம்மா மேனியெந் தோழியது துயரே!

தெளிவுரை : வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மட்நடை நாரையானது, அதை மறந்து, கானலின் பெருந்துறையிடத்தே தன் துணையோடு திரியும் குளிர்ந்த கடற்றுறைத் தலைவன், அழகிய மாமைநிறங் கொண்ட மேனியளான எம் தோழியது துயரத்தைத் தீர்க்கும் பொருட்டு வந்துள்ளதைக் கண்டனமே! இஃது என்னே வியப்பு!

கருத்து: 'நின் பரத்தை இல்லிற்கே சென்று, அவள் புலவியை நீக்கி இன்புற்றிருப்பாயாக' என்றதாம்.