பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. வளைப் பத்து

'வளை' சிறப்பாகச் சங்குக்கே வழங்கப்பெறும் பெயராகும். சங்கறுத்து வளைகள் செய்வது அந்நாளிலும் மிகப்பெரிய கைவினைத் தொழிலாகவே விளங்கியிருக்கின்றது. 'சங்கறுப்போர்' என்றே சிலர் தம் குலத்தைக் குறிப்பதனையும் இலக்கியங்களிற் காண்கின்றோம்.

நெய்தல் மகளிரே அல்லாமல், பிற நானில் மகளிரும் சங்குவளையல்களை விரும்பி வாங்கி அணிந்திருக்கின்றனர். 'வளை' என்னும் சங்கின் பெயரே, பிற எவ்வாற்றானும் செய்தணியும் கையணிகளையும் குறிப்பதால், இதுவே முற்காலத்தில் பெருவழக்கிலிருந்த அணியென்பதனைக் காட்டும்.

'வலம்புரி வான்கோடு நரலும்' என வரும் நற்றிணைத் தொடரால், வலம்புரி இடம்புரி எனச் சங்குகள் சுழித்திருத்தலாற் பெயரிடும் பழையமரபையும் அறியலாம். எல்லா வகையான விழாக்காலத் தொடக்கத்தும், மற்றும் சிறப்பான சமயங்களிலும், சங்கை உரத்து முழக்குதல் மங்கல வழக்காக அன்றும் விளங்கிற்று: இன்றும் பல பகுதிகளில் விளங்குகின்றது. ஒவ்வொருவரும் முழக்கும் சங்கோசையின் தனித்தன்மை பற்றிய செய்திகளும் வரலாற்றுள் காணப்படுகின்றன. அம் முழக்கே அவர் வரவை முன்னதாக உணர்த்தும் அறிகுறியாகவும் கொள்ளப்பெற்றது. போர் முகத்தில் எழும் இச் சங்கோசைகள் பற்றிய சிறப்பினை மாபாரதக் கதையுள்ளே காணலாம்.

தெய்வங்களுக்கு வழிபாடாற்றும்போது முழக்கவும், நீர் முகந்து நீராட்டவும் சங்குகளே சிறப்பாகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. மாசுபடராமை பற்றிய சிறப்பும் தூய வெண்மையாம் தகைமையும் சங்கினைத் தேர்ந்து வழி பாட்டுக்கு உதவியாகக் கொண்டதற்குக் காரணமாகலாம்.

பெண்கள் வளையணிதல் இயல்பாதலோடு, அது கழன்று வீழாமற் படிக்குச் செறிவாகவும் பார்த்து அணிவார்கள். இதனால், தலை பிரிவுத்துயரால் மெலியும்போது வளை நெகிழ்தலும் கழல்தலும் நிகழ்பவாயின. இது பிறரும்