பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

29


ஏவலால் இயங்கியவனேயன்றித் தன்னளவில் தலைவிக்கு ஊறு செயநினைந்து செயற்பட்டிலன் என்பதனை நினைந்த அருளினாலும் ஆம். ஆகவே, தலைவனும் ஊறின்றி வாழ வேண்டினதும் கொள்க.

உள்ளுறை: 'நனைய காஞ்சியும் சினைய சிறுமீனும் மிகுதியாகவுடைய ஊரன்' என்றது, மிகுதியென்ற நிலையில் உயர்ந்த ஒன்றையும் இழிந்த ஒன்றையும் ஒருசேர இணைத்துக் கூறுதலேபோலத் தலைவியையும் பரத்தையையும் மட்டிலே ஒன்றுபோலவே நினைத்த காமநுகர்வுபற்றிய பேதையாளனாயினான் என்றதாம்.

மேற்கோள்: 'இது வாழ்த்தல் என்னும் மெய்ப்பாட்டில் வந்தது' என இளம்பூரணனார் காட்டுவர். (தொல் - மெய்ப்பாட்டியல்,சூ.12.உரை)

குறிப்பு: 'வாழி ஆதன்" என்பதனை, 'வாழியாதன்' எனவே கொண்டால், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம். அப்போது, அவனுக்கு உட்பட்ட குறுநிலத்தலைவனாக 'அவினி'யைக் கொள்க. கொங்குநாட்டு 'அவினாசி' என்னும் ஊர்ப் பெயர் அவினியை நினைவு படுத்தும். மதுரைப் பக்கத்து 'அவனியாபுரம்' அவினி அப்பகுதித் தலைவனாகப் பாண்டியலுக்கு உட்பட்டிருந்தவன் என்று நினைக்கவே நம்மைத் தூண்டும்.

2. விளைக வயலே!

துறை: மேற்செய்யுளின் துறையே யாகும்.

'வாழி ஆதன்; வாழி அவினி!
விளைக வயலே; வருக இரவலர்!'
எனவேட் டோளே! யாயே; யாமே,
'பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை

வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே!

தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வயல் விளைக; இரவலர் வருக' எனத் தலைமகள் விரும்பி வேண்டினள். 'பலவான இதழ்களைக் கொண்ட நீலத்தோடு நெய்தலும் நிகராக மலர்ந்திருக்கும், குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊருக்கு உரியவனான தலைவனின் நட்பானது, தலைவியோடே வழிவழிச் சிறப்பதாக' என, யாங்கள் வேண்டினேம்.