பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

69


தோழி, தலைவியின் களவு உறவைச் செவிலித்தாய்க்குப் புலப்பட உரைத்து,அறத்தொடு நிற்கின்றதாக அமைந்த செய்யுள் இது.]

மாரி கடிகொளக், காவலர் கடுக,
வித்திய வெண்முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்,
திதலை அல்குல் நின்மகள்

பசலை கொள்வது எவன்கொல்? - அன்னாய்!

தெளிவுரை : "அன்னையே! மாரியும் மிகுதியான பெயலைச் செய்ய, காவல் செய்வோரும் விரைவாக வந்து பார்வையிட, விதைத்த வெள்ளிய முளைகளை அலவன் அறுத்துத் திரியும் கழனிகளையுடையவன் ஊரன்! அவன் மார்பினைப் பொருந்தத் தழுவி இன்புற்றதன் பின்னும், தேமற் புள்ளிகள் கொண்ட அல்குல் தடத்தை உடையவளான நின் மகள்தான், பசலை நோயினைத் தன்பாற் கொள்வதும் எதனாலோ?

கருத்து: அவனையே அவளுக்கு மணமுடித்த அறத்தொடுபட்ட நெறியாகும்.

சொற்பொருள்: மாரி - கால மழை. கடிகொளல் - மிக்குப் பெய்தல். கடுக - விரைவாக வர: மழை நின்ற வேளையிலே காவலர் வித்திய வயல்நோக்கி விரைந்து வந்தது பெருமழையால் வித்திய வித்துச் சேதமாதலைத் தடுத்தற் பொருட்டாக என்க. வெண்முளை - வெள்ளியமுளை; வித்தை முளைகட்ட விட்டு விதைப்பதே இன்றும் சேற்று விதைப்பினர் மரபு. அறுக்கும் - கெடுக்கும். மார்பு உற மரீஇ - மார்பு பொருந்தத் தழுவி; 'மார்புற அறீஇ' என்றும் பாடம். திதலை - தேமற்புள்ளிகள்; துத்தி என்பர்; திதலை அல்குல்' என்பர் பிறரும் (குறுந். 27, அகம். 54). பசலை - பசத்தலாகிய காமநோய்க் கூறு.

விளக்கம்: இதுவும் கருப்பொருள் நோக்கி மருதமாகக் கொள்ளற்கு உரிய செய்யுளே. அறத்தொடு நிற்றலே இதன் துறையாவதும் அது குறிஞ்சிக்கு உரியதும் நினைக. இஃது 'உண்மை செப்பல்' என்பர்.

உள்ளுறை: 'வித்திய விதையிடத்தே தோன்றும் முளையினை, அவ்வயலிடத்தே வாழ்தலை உளதான களவன் அறுக்கும் ஊரன்' என்றது. அவ்வாறே தம் மகளிடத்தே