பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. தோழிக்கு உரைத்த பத்து

இப் பத்துச் செய்யுட்களும், கேட்போளாகிய தோழி பொருளாகத் தொகை பெற்றுள்ளன. 'அம்ம வாழி தோழி' என்றே ஒவ்வொரு செய்யுளும் விளியோடு தொடங்குகின்றது. இங்குப் பேசுவோர் பலராயினும் கேட்பவள் தோழியே. தோழியருள்ளும் பலரிடம் கூறியிருத்தல் என்றல் பொருந்து மேனும், ஒருமையிற் கூறுதல் இலக்கிய மரபு நோக்கி என்க.

31. கடனன்று என்பானோ?

துறை: முன் ஒருநாள், தன்னோடு புதுப்புனல் ஆடுழி, இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன், பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள் அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: முன்னொரு தடவை தலைவியோடு சென்று புதுப்புனல் ஆடினான் தலைமகன். அப்போது, அவளும் அவள் தோழியரும் கூடியிருக்கும் இடத்தே, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' எனச் சூளுரையும் விரும்பிச் செய்தான் அவன். பின்னாளில், பரத்தையரோடு புனலாட்டயர்கின்றான் என்பது கேட்டாள் தலைமகள். அவள் நெஞ்சம் பெரிதும் வேதனைப்படுகின்றது. தோழியிடம் சொல்வாள்போலத் தலைவனின் நெருக்கமான ஏவலர் பிறரும் கேட்கச் சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்.]

அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடனன் றென்னும் கொல்லோ - நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை

உடனாடு ஆயமோடு உற்ற சூளே?

தெளிவுரை: "தோழி, ஒன்று சொல்வேன் கேட்பாயாக: நம் ஊரிடத்தே வளைந்து முதிர்ந்த மருதமரங்கள் நிறைந்துள்ள பெருந்துறைக்கண்ணே, நம்மோடும் புனலாட்டு அயர்ந்தவரான