பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

91


வட்டி - கடகப்பெட்டி. சொரிதல் - கொணர்ந்து கொட்டுதல். அரிகாற் பெரும்பயறு - நெல் அரிந்த தாளடியிலே வித்திப் பெற்ற பெரும்பயறு. ஆயம் - பாங்கியர். பாணன் - பாண் மகன்; தலைவனின் ஏவலை ஏற்றுச் செய்வோன்; அவன் பரத்தமைக்கு உதவியாகவும் நின்று செயற்படுவோன்.

விளக்கம் : 'முள்ளெயிற்றுப் பாண்மகள்' என்றது, அவள் சின்னஞ்சிறுமி என்பது தோன்றச் சொல்லியதாம். அவள். அகன்பெரு வட்டி நிறையக் "கெளிறு கொணர்ந்து சொரிந்து, அதற்கு ஈடாகப் பெரும்பயறு அதே வட்டி நிறையக்கொண்டு செல்வள்' என்றது, அவ்வூரவரின் பெருவளம் நிரம்பியதும், கொடைப்பண்பு சிறந்ததுமான மனைப்பாங்கை உணர்த்துவதாம். பெரும்பயறு - பயறுவகையுள் ஒன்று; இன்றும் அரிகாலில் உளுந்து, பயறு, எள்ளு, கொள்ளு முதலியன விதைப்பது வழக்கம். அவை தாமே முளைத்துக் காய்த்துப் பயன்தருவதும் காணலாம். வட்டி நிறையப் பெரும்பயறு தந்துவிடுதல் மனையாளின் பெருமித மனத்தையும் உணர்த்தும். மாணிழை - சிறந்த அணிவகைகள்.

உள்ளுறை : "மீன் சொரிந்த வட்டி நிறையுமாறு பெரும்பயறு பெய்தனுப்பும் மனையோள் நிரம்பிய ஊராதலின். எமக்கு நீதான் சிறுமையே செய்தனையேனும், எம் பெருந்தகவால் நின்னை மீண்டும் ஏற்கும் நெகிழ்ந்த அன்பு மனத்தினர் யாமும் ஆவோம்" எனக் குறிப்பால் தன் இசைவு புலப்படுத்தியதும் ஆம்.

'கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பெரும் பயறு நிறைக்கும் ஊர' என்றது, நீ நின் காதல் சொல்லிப் பொருளொடு பாணனை விடுத்திட, அவரும் அதனையேற்று, அதற்கீடாகத் தம் சிறந்த காதலைச் சொல்லி வரவிடப் பெறுவாய்' என, அவன் பரத்தைமை ஒழுக்கத்தைச் சுட்டியதும் ஆம்.

குறிப்பு : 'மாணிழை' தலைவியைக் குறிக்கும் எனக் கொண்டனமானால், இதனைத் தோழி வாயின் மறுத்துக் கூறியதாகவே கொள்ளலாம்.

48. நின் வரவினை வேண்டேம்!

துறை: பரத்தையர் மாட்டு ஒழுகா நின்று, தன் மனைக்கண் சென்ற தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.