பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

என்பதும் நன்கு விளங்குகின்றது. தாயை யார் என நன்கு அறிவிக்க, வள்ளுவர் மற்றொரு குறளையும் கூறியிருக்கிறார். அது,

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி”

என்பது. தாயின் தன்மை எக்குற்றத்தையும் பொறுக்கும் இயல்புடையதாகும். பிள்ளையை வெறுக்கும் குணம் (தந்தைக்கு வந்தாலும்) தாய்க்கு வாராதாம். தன் பிள்ளையைத் திருடன் என்று கூறத்கேட்டாலும் நம்பாளாம். ‘திருட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து போயிருப்பான்’ என்றே எண்ணுவாளாம். விலைமதர் விட்டுக்குச் சென்றான் எனக்கேட்டாலும் நம்பாளாம் ‘தெருவிலுள்ள பிற பிள்ளைகள் அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றிருப்பர்; விரைவில் திருந்திடுவான்’ என்றே எண்ணுவாளாம். கொலைக்காரன் எனக் கூறக் கேட்டாலும் ஒப்பாளாம். ‘ஆத்திரத்தால் நேர்ந்திருக்குமோ’ என ஐயப்பட்டு, ‘அவனை விட்டுவிடுங்கள்’ எனப் படபடத்துத் தன் மகனை உயிரோடு திரும்பப்பெற ஓடியாடி அலைந்து உருக்குலைவாளாம்.

தான் பெற்ற மகன் சூதாடுவதற்குத்தான் பொருள் கேட்கிறான் என்பதைத் தாய் அறிவாளாம். என்றாலும், புத்தி சொல்லி, சில தடவை தந்தாலும், ஒரு தடவை மறுப்பாளாம். தர மறுத்த தாயை மகன் கன்னத்தில் அடிப்பானாம். அடிபட்ட தாயின் வாய் இரத்தம் கசிய, ‘பாவிப்பயலே! ஏண்டா என்னை அடிக்கிறாய்?’ எனக் கூறுமாம். ஆனால், அவளுடைய உள்ளமோ “தான் பெற்ற மகனுக்கு எவ்வளவு வலு இருக்கிறது?” என எண்ணி மகிழுமாம். இத்தகைய தாய்கூட தன் மகன் குடித்து வெறித்திருக்கிறான் எனக் கண்டால். வெட்கிப் போய் முகஞ்சுளித்து வெறுத்து விடுவாளாம். “பெற்ற தாய் முகத்தும்கூடக் குடி வெறுக்கப்படுமானால், சான்றோர் முகத்தின் முன்னே அது என்னாகும்?” என்பதே வள்ளுவரின் கேள்வியாகும். இதிலிருந்து, ஒரு சிறு குற்றம் செய்தாலும் வெறுப்பவர் சான்றோர் என்பதும், எக்குற்றம் செய்தாலும் பொறுப்பவள் தாய் என்பதும்