பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

படவில்லை. இன்னும் சிறிது காலம் இது அச்சேறாமல் இருந்தால் இக் கதைப்பாடலைக் காலம் மக்கள் நினைவிலிருந்து நீக்கிவிடும். அவ்வாறு நீங்காமல் நிலைக்கச் செய்வதற்காக இதனை அச்சேற்றக் காரணமாயிருக்கும் மதுரைப் பல்கலைக் கழகத்திற்கும் இம்முடிவுக்குவர மதுரைப் பல்கலைக்கழகத்தைத் தூண்டிய அதன் துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருக்கும் தமிழக மக்களின் சார்பிலும், நாட்டுப்பாடல் ஆராய்ச்சியாளர்கள் சார்பிலும் நன்றி கூறுகிறேன். பிற்சேர்க்கை வீணாதி வீணன் கதை இன்னும் வள்ளியூர்ப்பகுதியில் பரவியுள்ளது. அது உண்மை நிகழ்ச்சியென்பதைப் புலப்படுத்தும் சில சான்றுகளும் அகப்பட்டுள்ளன. ஆனால் இக் கதைப் பாடல் ஐவர் ராசாக்கள் கதைப்பாடல் கையெழுத்துப் பிரதிகள் பலவற்றில் காணப்படவில்லை. வள்ளியூரிலிருந்து கிடைத்த பாடல் பிரதியில் மட்டும் காணப்பட்டது. அதனைத் தனியாக முடிவுரை, குறிப்புரைகளுடன் நான் நியூசென்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிட்டுள்ளேன். அது தனிப்பாடலாயிருப்பினும், இக்கதை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இக்கதையோடு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் அதனைத் தனிப் பிற்சேர்க்கையாக பதிப்பித்துள்ளேன். மூலப் பிரதிகள் பெயர்த்தெழுதுதல் இக்கதைப்பாடலின் பிரதிகள் மூன்று கிடைத்தன. (1) மாலையம்மை கதை - ஐவர் ராசாக்கள் கதை முதல் பகுதி இது. இக்கதையில் குலசேகரனும் அவன் தம்பியரும் பிறப்பதற்காக அவர்களது தாய் செய்யும் தானதருமங்களும் அவர்களது பிறப்பும் கூறப்படுகிறது. (2) ஐவர் ராசாக்கள் கதை-பழைய பிரதி. இது . அருணாசலக் கவுண்டர் அவர்கள் அளித்தது, (கவுண்டர் பிரதி)