கலைஞரின் சட்டமன்ற உரைகள்
77
உரை: 13
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
நாள் : 26.3.1971
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவர் அவர்களே, டாக்டர் ஹாண்டே அவர்கள், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட சம்பவங்கள் என்கின்ற பெயரில், எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தந்து, அதன்மீது சில கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள்.
தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் சகோதரர்களாகப் பழகிட வேண்டுமென்று, தேர்தலுக்குப் பிறகு எந்தவிதமான கலவரங்களும் நாட்டிலே ஏற்பட்டு, தமிழ்நாட்டினுடைய பண் பாட்டையும், அரசியல் நாகரிகத்தையும் கெடுத்துவிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என்றும் நான் ஓர் அறிக்கை விடுத்ததையும் அவர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அவர்கள் இங்கே அந்த அறிக்கையைப் புகழ்ந்து பேசினார்கள் என்றாலும், அந்த அறிக்கை மற்ற கட்சிகளினுடைய தலைவர் களால் -அவர்கள் குறிப்பிட்ட ஜனநாயகக் கூட்டணியினுடைய தலைவர்களால்- எள்ளிநகையாடப்பட்டது என்பதைத்தான் நான் இங்கே வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான், முதலமைச்சர் என்ற முறையிலோ அல்லது முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவன் என்ற முறையிலோ அந்த அறிக்கையை விடுத்திருந்தாலும், எல்லாக் கட்சிகளினுடைய தலைவர்களும் அதுபோன்றதொரு அறிக்கையை விடுத்திருப்பார்களேயானால், நான் விடுத்த அறிக்கைக்கு மேலும் வலுவளிக்கின்ற வகையிலே அவை அமைந்திருக்கக்கூடும். ஆனால், என்ன காரணத்தாலோ- 4ந் தேதியன்று நான் அறிக்கை விடுக்கிறேன் - 6ந் தேதியன்று மதிப் பிற்குரிய காமராஜ் அவர்களுடைய அறிக்கை வெளிவருகிறது.