பக்கம்:ஒத்தை வீடு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 2O7 இருக்கும் உறவு சித்திக்கு தெரியக்கூடாது என்பதற்காக, அப்படி கதவை அறைந்தாரா..? எப்படியோ, இப்போ பேண்ட், சட்டை போட்டுக் கொண்டிருப்பார். சீக்கிரமாய் தெருவிற்கு வருவார். என்னைப் பார்ப்பதற்காகவே அங்குமிங்குமாய் நடப்பார். ஆசாமியை அலைய விடக்கூடாது. வாசலிலேயே வரவேற்று, வீட்டுக்குள் கடத்த வேண்டும். "நான் புறப்படுறேன் ஆன்ட்டி" "அதுக்குள்ள என்னம்மா அவசரம்? ஒரு ஜூஸ் கொண்டு வாரேன்." கவிதாவின், பதில் சத்தம் வலுத்தது. "நான் வீட்ல தனியாத்தான் இருக்கேன் ஆன்ட்டி ஒரு பிரண்ட் வருவாங்க நல்லாநேரம் போகும். சீக்கிரமா வாங்க." "இப்பவே வேணுமுன்னாலும் வாரேம்மா. ஒன் வீட்ட வெளியிலதான் பார்த்திருக்கேன்" கவிதாவின், புயல் சத்தம் பூச்சத்தமானது. “ஸாரி ஆன்ட்டி சீக்கிரமா போகணும் என்கிறத, வாங்கன்னு' என்று சொல்லிட்டேன். வீட்ல சாமான்கள் தாறுமாறா கிடக்குது. நாளைக்கு நானே வந்து உங்கள கூட்டிட்டுப் போறேன். நான் வாரேன் ஆன்ட்டி.." கவிதா, அந்த வீட்டு உள்ளோட்டத்தை திரும்பித் திரும்பி பார்த்தபடியே, வெளியே வந்தாள். சொந்த வீட்டின் இரும்புக் கிராதிகளில் சாய்ந்தபடியே நின்றாள். கண்கள் மட்டும் அங்குமிங்குமாய் சுழன்றன. அவன் டிரெஸ் செய்வதற்கு பதினைந்து நிமிடம் நேரம் கொடுத்து நின்றாள். சித்தியிடம், வாங்கிக் கட்டிக் கொள்வதற்கு இன்னொரு பத்து நிமிடம். ஒருவேளை அவன் தன்னோடு அதிக நேரம் தங்கவேண்டும் என்பதற்காக, அவன் சாப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கினாள். பிறகு நகத்தை கடித்தாள் இனிமேல் ஒருவேளை குளிக்கப் போகிறாரோ என்று நேர ஒதுக்கீடு செய்தாள். சித்தி, இன்னும் சமையலை முடித்திருக்க மாட்டாள் என்பதற்காக சிறப்பு நேர ஒதுக்கீடு வழங்கினாள் ஆகக்கூடி இரண்டு மணிநேரம் வரை கத்திருந்தாள். வீட்டுக்குள்ளும் போக முடியாமல், வெயில் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாகவும் நடக்க முடியாமல், எல் வலியை சரிசெய்ய, அதை சிறிது முன்னால் நீட்டியபடியே கம்பிக் கிராதிகளில் சாய்ந்தாள். பிறகு, குறுக்கும் நெடுக்குமாய் கோணல் மாணலாய் நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/207&oldid=762268" இலிருந்து மீள்விக்கப்பட்டது