பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழி வகுப்பு முறை

ஒரு மொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, இடை(Middle) க்கால வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந்நிலைகளை யடைந்திருக்கும்.

ஒரு மொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்கு களையுடையதாயிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள்பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப்படும் (கா: உயர்ஜெர்மன் — High German, தாழ் ஜெர்மன் — Low German). தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும்.

ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Colloquial Dialect) என்றும் கூறப்படும்.

3. மொழிக்குலம்

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும்பற்றி, துரேனியம் (Turanian), ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு குலமும் பல குடும்பங் (family) களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது.

தமிழ் துரேனியக் குலத்தில்[1] திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத்திற்கு இந்தோ-ஐரோப்பியம் (Indo-European), அல்லது இந்தே-ஜெர்மானியம் (Indo-Germanic) என்றும் பிற பெயர்களுமுண்டு.

மொழிப் பகுப்புமுறை - Classification of Languages

மொழிப் பகுப்புமுறை, (1) வடிவுமாறியல் (Morphological), (2) மரபுவரிசையியல் (Historical or Geneological) என்ற இரு முறை பற்றியது. இவற்றுள், முன்னையது மொழிகளை அசை நிறை முதலிய அறுவகை நிலையாகப் பகுப்பது;


  1. 1. திராவிடக் குடும்பம், ஒரு சிறு குழுவாயிருந்தாலும் முக்குலத்தினின்றும் வேறாகத் தனித்துக் கூறப்படற்குரியதென்பது பின்னர்க் காட்டப்படும்.