பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழி நூல் நெறிமுறைகள்

௧௧

குறியீடும் அவரதே. அதன் பின்னது டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் எழுதி 1936-ல் வெளியிட்ட 'தமிழ் மொழிநூல்' ஆகும்.

அதன்பின்னது, கலைத்திறவோரும் (M.A.) சட்டத்திற வோரு (M.L.)மான கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் எழுதி, 1939ஆம் ஆண்டில் வெளிவந்த 'மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்', என்பதாகும்.

மொழிநூல் நிலை

உலகில் ஒவ்வொரு கலையும்,

(1) ஆய்வுநிலை (Empirical Stage),

(2) பாகுபாட்டுநிலை (Classificatory Stage),

(3) கொண்முடிபுநிலை (Theoretical Stage)

என முந்நிலைப்படும். அங்ஙனமே மொழிநூற்கலையும். மொழி நூற்கலையில் ஆய்வுநிலையாவது, மொழிகளைத் தனித்தனி ஆராய்தல்; பாகுபாட்டுநிலையாவது, தனித்தனி ஆராய்ந்த மொழிகளைச் சொற்களிலும் இலக்கணத்திலும் உள்ள ஒப்புமை பற்றி, பல குடும்பங்களாகவும் அக் குடும்பங்களைப் பல குலங்களாகவும் வகுத்தல்; கொண்முடிபு நிலையாவது, ஒரு குடும்ப மொழிகட்குள்ளும், பல குடும்பங்கட்குள்ளும், பல குலங்கட்குள்ளும் உள்ள தொடர்பையும், அவற்றின் நிலைகளையும், ஒலிநூல் (Phonology), உளநூல் (Psychology) முதலிய கலைகளையும் துணைக் கொண்டு, எல்லா மொழிகட்கும் பொதுவும் அடிப்படையுமான ஒரு மூலமொழியைக் கண்டுபிடித்தற்கான விதிகளையறிந்து, அதைக் கண்டுபிடித்தல். இக் கொண்முடிபு நிலையும் (1) ஆராய்ச்சி, (2) முடிவு என இருநிலைப்படும்.

உலகில், மொழிநூற்கலை முதலிரு நிலைகளையுங்கடந்து, இதுபோது மூன்றாம் நிலையில் ஆராய்ச்சிநிலைமையிலுள்ளது.

4. மொழிநூல் நெறிமுறைகள் — Principles of

Comparative Philology

மொழிநூலானது, ஒரு சிறந்த தனிக் கலையானாலும், அதன் நெறிமுறையறியாத சிலருடைய வழூஉக் கூற்றுகளால், பொதுவாய் மிகவும் பழிக்கப்படுகின்றது.