பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨

ஒப்பியன் மொழிநூல்

மொழி நூல் நெறிமுறைகளாவன :—

1. மொழிநூல் ஒரு தனிக்கலை

பலர் மொழிநூல் ஒரு தனிக்கலையென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரேனும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லாதிருப்பின் இழிவென்றெண்ணி, 'பொருந்தப் புளுகல்' என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லி விடுகின்றனர். பாண்டித்தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர்.

காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சியில் ஒருமுறை 'வடை' என்னும் தின்பண்டப் பெயர், 'வடு' என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத்தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும் கூறியுள்ளனர். வடை என்பது 'வள்' என்னும் வேரினின்று பிறந்ததென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென்பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும்படி துளையிடுவதென்பதையும், துளையினால் சுவை யாவது மணமாவது கெடாதென்பதையும் அவர் அறிந்திலர்.

ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை — பெடை; வள்+தை = வட்டை — வடை. பெள் = விரும்பு, வள் = வளை.

2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது

'அட்டையாடல்' என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங்கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. அட்ட அல்லது அட்டெ = முண்டம் (தெ., க.)[1]

அம்பு (வளையல்), அம்பி (படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன.

amphi = round; (amphitheatre என்னும் தொகைச் சொல்லை நோக்குக.)

3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது


  1. 1. வேங்கடராஜு லு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்).