பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிநூல் நெறிமுறைகள்

௨௩

மாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும்.

மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப்பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ணுப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா, போ என்பன போன்ற முக்கிய வினைகள் என்பனவே போதுமாயினும், பல சொற்களும் தெரிந்திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறுதலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்ததாகும்.

8. ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழி நூல் பயிலலாம்.

ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத்திற்குச் செல்வது இன்றியமையாததன்று; தம் இடத்திலிருந்து கொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதிகளையுந் துணைக்கொண்டு அயன் மொழிகளைக் கற்கலாம்.

9. ஒரு மொழியறிவு பிறமொழியறிவுக்குத் துணையாகும்.

ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழியிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டுபிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக்கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதனாலும், உலகத் தாய்மொழியின் இயல்பையும் வளர்ச்சியையும் அறியத்தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலாலும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவுபெருகுவதாலும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழியறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும்.[1]

10. தாய்மொழி முன்னும் அயன்மொழிபின்னும் கற்கப்பட வேண்டும்.

ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடுமாயினும், அதன் மரபையும் இலக்கணத்தையும் கற்றேயறிய வேண்டியதிருக்கின்றது. தாய்மொழியியல்பையறியுமுன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர்.


  1. 1.இங்குக் கூறியது மொழியறிஞருக்கேயன்றி, இந்திக் கட்டாயக் கல்விபோல எல்லார்க்குமன்று.


ஒ.மொ —7